திருவள்ளூர் அருகே சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பு அகற்றம்
திருவள்ளூர் அருகே சுடுகாட்டு பாதையில் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டது.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் வெங்கத்தூர் ஊராட்சிக்கு உட்பட்டது மணவாளநகர் பகுதி. இங்கு சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இறந்தவர்களின் உடல்களை மணவாளநகர் பகுதியில் உள்ள கூவம் ஆற்றங்கரை ஓரம் அடக்கம் செய்து வந்தனர்.
கடந்த சில மாதங்களாக அந்த சுடுகாட்டு பாதையை மர்மநபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்தனர். இதனால் இறப்பு ஏற்படும் சமயங்களில் இறந்தவர் உடலை எடுத்து சென்று அடக்கம் செய்ய அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சரியான பாதை இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர்.
அதிரடியாக அகற்றம்
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி திருவள்ளூர் மாவட்ட கலெக்டரும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவின்பேரில் நேற்று திருவள்ளூர் தாசில்தார் தமிழ்ச்செல்வன் நேற்று மணவாளநகர், ஒண்டிக்குப்பம் பகுதிக்கு சென்று அங்கு சுடுகாடு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டார்.
பின்னர் ஜே.சி.பி எந்திரம் மூலம் அங்கிருந்த ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டு, எல்லைக்கற்கள் நடப்பட்டது. அப்போது அவருடன் தனி தாசில்தார்கள் வெங்கடேஷ், செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசன், ஊராட்சி செயலாளர் மகேந்திரன் மற்றும் வருவாய்த்துறையினர் பலர் உடனிருந்தனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
Related Tags :
Next Story