ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட 3 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்
கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திராவில் இருந்து லாரியில் சென்னைக்கு கடத்தப்பட்ட 3 டன் செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகர், சுரேஷ் ஆகியோர் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது எளாவூர் பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையில் இருந்து 2 லாரிகள் வந்தது. அதில் ஒரு லாரி தமிழக பதிவு எண் கொண்ட லாரி. மற்றொரு லாரி ஆந்திர பதிவு எண் கொண்ட லாரியும் ஆகும்.
இதனைக்கண்ட போலீசார் மேற்கண்ட லாரிகளின் அருகே விரைந்து சென்று மடக்கிப் பிடித்தபோது அதில் இருந்த டிரைவர்கள் லாரியை விட்டு இறங்கி தப்பி ஓடிவிட்டனர்.
3 டன் செம்மரக்கட்டைகள்
இதனை தொடர்ந்து 2 லாரிகளையும் போலீசார் சோதனை செய்தனர். அப்போது தமிழக பதிவு எண் கொண்ட லாரியில் 3 டன் எடை கொண்ட 40 செம்மரக்கட்டைகளும், மற்றொரு ஆந்திர பதிவு எண் கொண்ட லாரியில் செம்மரக்கட்டைகளின் துகள்களும் இருந்தன.
இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தியபோது, ஆந்திராவில் இருந்து ஆந்திர பதிவு எண் கொண்ட லாரியில் செம்மரக்கட்டைகளை கடத்தி வந்து பின்னர், அந்த கட்டைகளை தமிழக பதிவு எண் கொண்ட மற்றொரு லாரியில் மாற்றி அங்கிருந்து கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது.
வெள்ளை பெயிண்டால் குறியீடு
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட இந்த செம்மரக்கட்டைகள் ஏற்கனவே ஆந்திர மாநில வனத்துறை அல்லது போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டவையாக இருக்கலாம் எனவும் தெரிகிறது.
ஏனெனில் பெரும்பாலும் செம்மரக்கட்டைகளை போலீசாரோ, வனத்துறையினரோ பிடிக்கும் போது வழக்கு பதிவு செய்வதற்கு ஏதுவாக எத்தனைக்கட்டைகள் பிடிபட்டது? அவற்றின் தனிப்பட்ட எடை என்ன? என்பதனையும் பதிவு செய்வார்கள.
அப்படி பதிவு செய்திடும்போது செம்மரக்கட்டைகளில் 1 அல்லது 2 என எண்களை வெள்ளை பெயிண்டால் எழுதுவது வழக்கம். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளை வழக்கு முடியும் வரை பாதுகாப்பாக அதிகாரிகள் வைப்பார்கள்.
ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டவையா?
தற்போது பிடிபட்ட செம்மரக்கட்டைகள் அனைத்திலும் எண்ணிக்கையை கணக்கீடும் வகையில் இது போன்ற எண்கள் வெள்ளை பெயிண்டால் எழுதப்பட்டு இருந்தது.
எனவே ஏற்கனவே ஆந்திர மாநில அதிகாரிகளிடம் பிடிபட்ட மேற்கண்ட செம்மரக்கட்டைகளை யாரேனும் கடத்தல் கும்பலிடம் விற்பனை செய்திருக்கலாம் அல்லது அதிகாரிகள் பறிமுதல் செய்து பாதுகாத்து வைத்திருந்த செம்மரக்கட்டைகளை யாரேனும் திருட்டுத்தனமாக கடத்தி வந்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்த நிலையில் பிடிபட்ட 2 லாரிகளுடன் செம்மரக்கட்டைகளை ஆரம்பாக்கம் போலீசார் கும்மிடிப்பூண்டி வனசரகர் மாணிக்கவாசகத்திடம் ஒப்படைத்தனர். இதுபற்றி வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story