சித்தராமையா வந்தவுடன் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து முடிவு துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் பேட்டி


சித்தராமையா வந்தவுடன் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து முடிவு துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் பேட்டி
x
தினத்தந்தி 14 Sep 2018 10:00 PM GMT (Updated: 14 Sep 2018 9:15 PM GMT)

சித்தராமையா வந்தவுடன் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கூறினார்.

பெங்களூரு, 

சித்தராமையா வந்த வுடன் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கூறினார்.

துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

எந்த ஆபத்தும் இல்லை

காங்கிரஸ் கட்சிக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. தனது தொகுதியில் உள்ள பிரச்சினைகள் குறித்து மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி கூறி இருக்கிறார். பிரச்சினைகளை வெளிப்படையாக பேசியதும், ஆட்சிக்கு ஆபத்து, ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று சொன்னால் எப்படி?.

நீங்கள் சொல்வது போல் அரசு கவிழ்ந்துவிடும் நிலையில் இல்லை. கூட்டணி ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை. இந்த அரசு நிலையான ஆட்சி நிர்வாகத்தை நடத்தும். பா.ஜனதா சார்பில் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கட்சி மாற லஞ்சம் வழங்குவது பற்றி ஊழல் தடுப்பு துறையில் புகார் செய்வோம்.

இனிப்பான செய்தி

பா.ஜனதா நிர்வாகிகளுக்கு விரைவில் இனிப்பான செய்தி கிடைக்கும் என்று எடியூரப்பா கூறி இருக்கிறார். இனிப்பு கிடைத்தால் அவர்கள் சாப்பிட்டு கொள்ளட்டும். அதைபற்றி நாங்கள் கவலைப்படவில்லை.

பெலகாவி அரசியலில் எழுந்துள்ள பிரச்சினையை கட்சிகளுக்குள் பேசி சரிசெய்வோம். மந்திரி டி.கே.சிவக்குமார் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக உள்ளார். அதனால் அவர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறார். இதை தலையீடு என்று கூறினால் எப்படி?.

மந்திரிசபை விரிவாக்கம்

கட்சி அலுவலகத்தை கட்டும் பணியை மந்திரி டி.கே.சிவக்குமாரிடம் ஒப்படைத்துள்ளோம். அதனால் அவர் பெலகாவிக்கு சென்று வந்தார். மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.

யாருக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும், எந்த சமூகத்திற்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டு்ம் என்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. சித்தராமையா வெளிநாடு சென்றுள்ளார். அவர் கர்நாடகம் வந்தவுடன் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

Next Story