ஊத்துக்குளி அருகே லாரி மோதி கல்லூரி மாணவர் பலி


ஊத்துக்குளி அருகே லாரி மோதி கல்லூரி மாணவர் பலி
x
தினத்தந்தி 14 Sep 2018 9:21 PM GMT (Updated: 14 Sep 2018 9:21 PM GMT)

ஊத்துக்குளி அருகே லாரி மோதியதில் மோட்டார்சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவர் பலியானார்.

ஊத்துக்குளி,

ஊத்துக்குளியில் இருந்து காங்கேயம் செல்லும் சாலையில் உள்ள இரட்டைக்கிணறு வடக்காலத்தோட்டம் பகுதியை சேர்ந்த முத்துக் குமார்-சிவகாமி தம்பதியின் மகன் கோகுல்கண்ணன் (வயது19). கடந்த சில வருடங்களுக்கு முன்பு தந்தை இறந்துவிட்டதால் கோகுல் கண்ணன் தனது தாயாருடன் இப்பகுதியில் வசித்து வந்தார்.

கோகுல்கண்ணன் பெருந்துறை அருகே உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்றுகாலை தனது மோட்டார் சைக்கிளில் ஊத்துக்குளி வருவதற்காக வள்ளியப்பன்பாறை அருகே வந்துகொண்டிருந்தபோது எதிரே ஈரோட்டில் இருந்து செங்கல் பாரம் ஏற்றிக்கொண்டு வந்த லாரி எதிர்பாராதவிதமாக கோகுல்கண்ணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

பரிதாப சாவு

இதில் தூக்கி வீசப்பட்ட கோகுல் கண்ணன் தலையில் பலத்த அடிபட்டு ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் காயம் அடைந்த அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ஊத்துக்குளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் தலைமறைவான லாரி டிரைவரை தேடி வருகின்றார்.

Next Story