ஆக்கிரமிப்புகளை அகற்றி குளங்களை மீட்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை


ஆக்கிரமிப்புகளை அகற்றி குளங்களை மீட்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 15 Sept 2018 4:15 AM IST (Updated: 15 Sept 2018 2:58 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி குளங்களை மீட்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொள்ளிடம்,

நாகை மாவட்டம், கொள்ளிடம் ஒன்றியத்தில் 42 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் குட்டைகளும், 100-க்கும் மேற்பட்ட கோவில் குளங்களும் உள்ளன. இதில் 350-க்கும் மேற்பட்ட குளங்கள் இருந்ததற்கான தடயமே இல்லாமல் உள்ளது. மேலும், குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்கள், கொட்டகைகள் போன்றவை அமைக்கப் பட்டுள்ளன.

இந்த குளங்கள் கிராமங்களில் நிலத்தடிநீரை பாதுகாப்பதற்காகவும், கிராம மக்களின் குடிநீர் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காகவும் வெட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தன. மேலும், குளங்களால் நிலத்தடிநீர் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டன. ஆனால் காலப்போக்கில் குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அதற்கான தடயமே இல்லாமல் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒவ்வொரு கிராமமாக நேரில் சென்று பார்வையிட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்துக்குள் புதைந்து கிடக்கும் குளங்களை மீட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story