செம்மரம் வெட்டி கடத்தியதாக விவசாயி சுட்டுக்கொலை: சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்
செம்மரம் வெட்டி கடத்தியதாக விவசாயி சுட்டுக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று அவரது மகன் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமியிடம் மனு கொடுத்துள்ளார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் கானமலை பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவர் ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்தியதாக சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த நிலையில் தனது தந்தை காமராஜ் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது மகன் ராமராஜன் (வயது 25) நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியிடம் புகார் மனு அளித்து உள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் இந்து மலையாளி பழங்குடி வகுப்பை சேர்ந்தவர்கள். எனது தந்தை காமராஜ் விவசாயம் மற்றும் கட்டிட வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திராவிற்கு கட்டிட வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். கடந்த மாதம் ஆகஸ்டு 31-ந் தேதி நள்ளிரவு எனது தந்தை செம்மரம் வெட்டி கடத்தியதாக கூறி ஆந்திர செம்மரக்கட்டை தடுப்பு சிறப்பு அதிரடி படையினர் சுட்டுக்கொன்று விட்டதாக ஜமுனாமரத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்து உள்ளார்கள்.
இதையடுத்து ஸ்ரீகாளஹஸ்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்த எனது தந்தையின் உடலை சென்று பார்த்தபோது சிறப்பு அதிரடிப்படையினர் கொடுமையான முறையில் சித்ரவதை செய்து மனித உரிமைகள் மீறும் வகையில் செயல்பட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்து உள்ளனர்.
மேலும் எனது தந்தை எப்படி இறந்தார் என்ற விவரத்தை கூறாமலும், இறந்தவரின் உடலில் உள்ள தடயங்களை மறைக்கும் வகையில் எங்களிடம் எந்தவித அனுமதியும் பெறாமல் பிரேத பரிசோதனை செய்துள்ளனர், அத்துடன் நாங்கள் மலைவாழ் பழங்குடி இன மக்கள் என்பதால் மிரட்டி உண்மையை மறைத்து விடலாம் என்ற நோக்கத்தில் ஆந்திரா போலீசார் முயற்சித்து வந்தார்கள். எனவே ஆந்திர செம்மர கட்டை தடுப்பு சிறப்பு அதிரடிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட எனது தந்தை காமராஜ் மரணத்தில் எங்களுக்கு சந்தேகம் உள்ளதால் பிரேதத்தை மறு கூறாய்வு செய்ய வேண்டும், சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.
மேலும் இதில் சம்பந்தப்பட்ட ஆந்திர செம்மரகட்டை தடுப்பு சிறப்பு அதிரடிப்படையினர் மீது வழக்குப்பதிவு செய்தும், பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு நஷ்டஈடு வழங்க கோரியும் ஐதராபாத் ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த 7-ந் தேதி பிரேத்தை மறுகூறாய்வு செய்து 4 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எனவே, ஐதராபாத் ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் பிறப்பித்த இடைக்கால உத்தரவுப்படி எனது தந்தை காமராஜின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்து உடலை எனது குடும்பத்தாரிடம் ஒப்படைக்க திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story