டவர் வேகன் தடம்புரண்டு விபத்து மெயின் வழித்தடத்தில் ரெயில் சேவை பாதிப்பு பயணிகள் போராட்டத்தால் பரபரப்பு


டவர் வேகன் தடம்புரண்டு விபத்து மெயின் வழித்தடத்தில் ரெயில் சேவை பாதிப்பு பயணிகள் போராட்டத்தால் பரபரப்பு
x
தினத்தந்தி 15 Sep 2018 12:00 AM GMT (Updated: 14 Sep 2018 9:56 PM GMT)

பராமரிப்பு பணியி ன்போது டவர் வேகன் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக மெயின் வழித்தடத்தில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

மும்பை, 

பராமரிப்பு பணியி ன்போது டவர் வேகன் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக மெயின் வழித்தடத்தில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. பயணிகள் போராட் டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு உண்டானது.

தடம்புரண்ட டவர் வேகன்

மத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடத்தில் உள்ள கசாரா- உம்பேர்மாலி ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்றுமுன்தினம் இரவு பராமரிப்பு பணி நடந்து கொண்டிருந்தது. நள்ளிரவு 1.05 மணியளவில் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்த டவர் வேகன் திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

இதன் காரணமாக மின்சார மற்றும் நீண்டதூர ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. அந்த வழியாக செல்லும் மும்பை- கவுரா கீதாஞ்சலி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 3 ரெயில்கள் கல்யாண்-புனே- மன்மாடு வழியாக திருப்பி விடப்பட்டன.

ரெயில்கள் ரத்து

மேலும் 4 ரெயில்கள் திவா- வசாய்ரோடு- புசாவல் வழியாக மாற்றி விடப்பட்டன. மன்மாடு- எல்.டி.டி. கோதாவரி எக்ஸ்பிரஸ், மன்மாடு- மும்பை ராஜ்யராணி எக்ஸ்பிரஸ், மும்பை- புசாவல் பயணிகள் ரெயில் ஆகிய 3 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

இதுதவிர 5 ரெயில்கள் குறிப்பிட்ட ரெயில் நிலையங்களோடு நிறுத்தப்பட்டன. மும்பையில் இருந்து கசாரா நோக்கி சென்ற மின்சார ரெயில்கள் அசன்காவ் ரெயில் நிலையத்தோடு நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள்.

இதற்கிடையே தடம்புரண்ட டவர் வேகனை தண்டவாளத்தில் தூக்கி நிறுத்தும் பணிகள் மும்முரமாக நடந்தன.

பயணிகள் போராட்டம்

நேற்று காலை வரையிலும் ரெயில் சேவை சீராகவில்லை. இந்த நிலையில், வாஷிந்த் ரெயில் நிலையத்தில் திரண்டிருந்த பயணிகள் ஆத்திரம் அடைந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு உண்டானது. பயணிகளின் போராட்டம் காரணமாக அசன்காவ் வரை இயக்கப்பட்ட மின்சார ரெயில்கள் டிட்வாலா ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்பட்டன.

இந்தநிலையில், டவர் வேகன் தடம்புரண்ட இடத்தில் தண்டவாளம் சரி செய்யப்பட்டு மதியம் 12.45 மணிக்கு ரெயில் போக்குவரத்து சீரானது.

துறைமுக வழித்தடம்

இதுபோல துறைமுக வழித்தடத்தில் நேற்று மாலை சென்றுகொண்டிருந்த சரக்கு ரெயில் குர்லா ரெயில் நிலையம் அருகே வந்தபோது என்ஜின் பழுதாகி நடுவழியில் நின்றது. இதனால் அந்த வழியாக வந்த மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்த ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து பழுதான என்ஜினை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

பலரும் வேலை முடிந்து வீடு திரும்பும் மாலை நேரத்தில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

இந்தநிலையில், சுமார் 40 நிமிடத்துக்கு பிறகு சரக்கு ரெயில் என்ஜின் சரி செய்யப்பட்டு அங்கிருந்து கிளம்பிச்சென்றது. இந்த சம்பவம் காரணமாக சுமார் அரை மணி நேரம் வரையிலும் மின்சார ரெயில்கள் தாமதமாக இயங்கின.

Next Story