விநாயகர் சிலை ஊர்வலத்தில் லாரி மோதி பக்தர் பலி வாகனங்கள் சூறை; போலீஸ் தடியடி
நாலச்சோப்ராவில், விநாயகர் சிலை ஊர்வலத்தில் சென்ற பக்தர் லாரி மோதி உயிரிழந்தார். இதையடுத்து நடந்த வன்முறையில் வாகனங்கள் சூறையாடப்பட்டன.
வசாய்,
நாலச்சோப்ராவில், விநாயகர் சிலை ஊர்வலத்தில் சென்ற பக்தர் லாரி மோதி உயிரிழந்தார். இதையடுத்து நடந்த வன்முறையில் வாகனங்கள் சூறையாடப்பட்டன. மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
லாரி மோதி சாவு
விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்றுமுன்தினம் பால்கர் மாவட்டம் நாலச்சோப்ரா வாலிவ் பகுதியில் இருந்து விநாயகர் சிலை ஒன்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இந்த ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். ஊர்வலம் அங்குள்ள சாலையில் சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக வேகமாக வந்த தண்ணீர் லாரி ஒன்று ஊர்வலத்தில் நடந்து சென்று கொண்டிருந்த கம்லேஷ் பிண்ட் (வயது35) என்ற பக்தர் மீது மோதியது.
மேலும் அவர் லாரியில் சிக்கி சில அடி தூரத்துக்கு லாரியுடன் தரதரவென இழுத்து செல்லப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திடீர் வன்முறை
இதைப்பார்த்து ஊர்வலத்தில் சென்ற மற்ற பக்தர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும் ஆத்திரம் அடைந்த அவர்கள் திடீரென வன்முறையில் ஈடுபட்டனர். கம்லேஷ் பிண்ட் மீது மோதிய லாரி மற்றும் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கினார்கள். இதனால் அங்கு பதற்றம் உண்டானது.
மேலும் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்டிருந்த பக்தர்களை கலைந்து செல்லும்படி எச்சரித்தனர். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்டி அடித்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் கம்லேஷ் பிண்டின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்கு காரணமான தண்ணீர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் விஜயகாந்த் சாகர் என்பவரை கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story