சதுர்த்தியன்று வைக்கப்பட்ட விநாயகர் சிலை முன்பு கல்லூரி மாணவிக்கு தாலிகட்டிய வாலிபரால் பரபரப்பு


சதுர்த்தியன்று வைக்கப்பட்ட விநாயகர் சிலை முன்பு கல்லூரி மாணவிக்கு தாலிகட்டிய வாலிபரால் பரபரப்பு
x
தினத்தந்தி 15 Sept 2018 3:54 AM IST (Updated: 15 Sept 2018 3:54 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் சதுர்த்தியன்று வைக்கப்பட்ட விநாயகர் சிலை முன்பு கல்லூரி மாணவிக்கு தாலிகட்டிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர், 

திருப்பூருக்குட்பட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மங்கலம் ரோடு பகுதியில் உள்ள ஒரு முக்கிய சந்திப்பில் விநாயகர்சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த சிலை முன்பு அந்த பகுதியை சேர்ந்த 18 வயது உடைய கல்லூரி மாணவி ஒருவர் வந்துள்ளார். அவர் வந்த சிறிது நேரத்திலேயே அதே பகுதியை சேர்ந்த 24 வயது வாலிபர் ஒருவரும் அங்கு வந்துள்ளார். அந்த வாலிபர் தனது சட்டைப்பையில் இருந்து மஞ்சள் கயிறு ஒன்றை எடுத்து கல்லூரி மாணவியின் கழுத்தில் தாலிகட்டியுள்ளார். இதனால் அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு வந்து அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் இருவரும் காதலித்து வந்ததும், ஆனால் பெற்றோர் காதலை ஏற்க மறுத்ததால் விநாயகர் சிலை முன்பு வைத்து தாலி கட்டிக்கொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். திடீரென இந்த சம்பவம் நடைபெற்றதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story