மாவட்ட செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களின்பஸ்பாஸ் விண்ணப்பங்களை வாங்க மறுக்கும் அதிகாரிகள் + "||" + Government school students Officials refusing to buy Buspos applications

அரசு பள்ளி மாணவர்களின்பஸ்பாஸ் விண்ணப்பங்களை வாங்க மறுக்கும் அதிகாரிகள்

அரசு பள்ளி மாணவர்களின்பஸ்பாஸ் விண்ணப்பங்களை வாங்க மறுக்கும் அதிகாரிகள்
அரசு பள்ளி மாணவர்களின் இலவச பஸ்பாஸ் விண்ணப்பங்களை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் வாங்க மறுப்பதாகவும், இது தொடர்பாக அலைக்கழிக்கப்படுவதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
திருப்பூர்,

தமிழக அரசு பஸ்பாஸ், நோட்டு, புத்தகங்கள் உள்பட 14 வகையான நலத்திட்ட உதவிகளை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. ஆனால் பள்ளிகள் திறந்து 3 மாதங்கள் முடிவடைந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு இன்னும் இலவச பஸ்பாஸ்கள் வழங்கப்படவில்லை. பழைய பஸ்பாஸ் உள்ளவர்கள் அதே பாஸை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்து உள்ளதால் அவர்கள் அதை உபயோகித்து வருகிறார்கள்.

அதே சமயம் புதிதாக பள்ளியில் சேர்ந்துள்ள பஸ்பாஸ் இல்லாத மாணவர்களுக்கு பள்ளிகளில் இருந்து தலைமையாசிரியர்கள் மூலம் அரசு போக்குவரத்து கழக கிளை அலுவலகங்களில் விண்ணப்பங்களை கொடுத்து பஸ்பாஸ்களை பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்தது. அதன்படி பள்ளி ஆசிரியர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு போக்குவரத்து கழக கிளை அலுவலகங்களில் விண்ணப்பங்களை கொடுத்தனர்.

இந்த விண்ணப்பங்கள் கொடுத்து 3 மாதங்கள் ஆகியும் மாணவர்களுக்கு இன்னும் பஸ் பாஸ் வழங்கப்படவில்லை. இதற்கான காரணம் என்ன என்று விண்ணப்பித்த ஆசிரியர்கள், அரசு போக்குவரத்து கழக கிளை அலுவலகங்களில் சென்று கேட்டுள்ளனர். அப்போது, அங்கிருந்த அதிகாரிகள் திருப்பூர்-காங்கேயம் ரோட்டில் உள்ள போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில்தான் விண்ணப்பங்களை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

அலைய வைக்கும் அதிகாரிகள்

அதைத்தொடர்ந்து அரசு போக்குவரத்து கழக கிளை அலுவலகங்களில் கொடுத்த விண்ணப்பங்களை மீண்டும் பெற்றுக்கொண்ட ஆசிரியர்கள், அந்த விண்ணப்பங்களை திருப்பூர் தலைமை போக்குவரத்து கழக அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். அப்போது, அங்கிருந்த அதிகாரிகள் “ மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்குவது தொடர்பான விண்ணப்பங்களை வாங்க மறுத்து, விண்ணப்பங்களை வாங்குவதற்கு அலுவலர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை. எனவே 10 நாட்கள் கழித்து விண்ணப்பங்களை கொண்டு வந்து கொடுங்கள்” என்று திருப்பி அனுப்பி விட்டார்கள். இவ்வாறு அதிகாரிகள் அலைய வைப்பதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் பஸ் பாஸ் கிடைக்காததால் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் மாவட்ட செயலாளர் கனகராஜா கூறியதாவது:-

பள்ளிகள் திறந்து முதல் பருவ தேர்வுகள் நடந்து வருகிறது. இது வரை பஸ்பாஸ் கிடைக்காததால் மாணவர்கள் பள்ளிக்கு வருவதில் சிரமம் இருந்து வருகிறது. ஆனால் அதிகாரிகள் இது பற்றி கவலைப்படாமல் ஆசிரியர்களை அலைக்கழித்து வருகிறார்கள். எனவே மாணவர்களின் விண்ணப்பங்களை அந்தந்த வட்டார போக்குவரத்து கழக அலுவலகங்களிலேயே வாங்கி கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உடனடியாக மாணவர்களுக்கு பஸ்பாஸ் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.