விழுப்புரத்தில் பயணிகள் திடீர் சாலை மறியல்
கூடுதல் பஸ்கள் இயக்கக்கோரி விழுப்புரத்தில் பயணிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்,
விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்று முன்தினம் அரசு விடுமுறை விடப்பட்டது. இதையொட்டி சென்னை உள்ளிட்ட பல வெளியூர்களில் தங்கி வேலை பார்த்து வருபவர்கள் விநாயகர் சதுர்த்தியை தங்களது குடும்பத்தினர், உறவினர்களுடன் கொண்டாட விழுப்புரம் பகுதியில் உள்ள அவரவர் சொந்த ஊருக்கு வந்தனர். இந்த நிலையில் விடுமுறை முடிந்து மீண்டும் அவரவர் தாங்கள் பணிபுரியும் இடத்திற்கு செல்ல பஸ்களில் புறப்பட்டனர். இதனால் அரசு பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இந்த சூழ்நிலையில் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, திருச்சி, சேலம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல போதுமான பஸ்கள் இயக்கப்படவில்லை. ஒன்றிரண்டு பஸ்கள் மட்டுமே வந்தன. அதுவும் குறித்த நேரத்தில் வராமல் தாமதமாக வந்தன.
அதுமட்டுமின்றி எப்போதும் விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு 5 நிமிடத்திற்கு ஒருமுறை பஸ்கள் இயக்கப்படும். ஆனால் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை செல்ல போதிய பஸ் வசதி இல்லை. இதனால் பல மணி நேரம் காத்துக்கிடந்ததில் ஆத்திரமடைந்த பயணிகள் கூடுதல் பஸ்கள் இயக்கக்கோரி நேற்று அதிகாலை 2.30 மணியளவில் திடீரென பஸ் நிலையம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பயணிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளை போலீசார் தொடர்பு கொண்டு பேசியதன்பேரில் பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து பயணிகள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அரசு பஸ்களில் புறப்பட்டுச்சென்றனர்.
இந்த திடீர் மறியலால் பஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story