கூரை இல்லாத வீடு...!


கூரை இல்லாத வீடு...!
x
தினத்தந்தி 15 Sept 2018 11:15 AM IST (Updated: 15 Sept 2018 11:15 AM IST)
t-max-icont-min-icon

நாளை (ஞாயிற்றுக்கிழமை) உலக ஓசோன் தினம்.

ஓசோன் இல்லாத பூமி கூரையில்லாத வீடு போன்றது. கூரையில்லாத வீட்டில் வாழ்வது எப்படி முடியாதோ அதே போன்று ஓசோன் வாயுப்படலம் இல்லாத பூமியில் நாம் மட்டுமல்ல, எந்த உயிரினங்களும் வாழ முடியாது. இதனால் தான் ஓசோன் படலத்தைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உலக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 16-ந்தேதி உலக ஓசோன் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

ஓசோன் வாயு என்றால் என்ன? அது எங்கே உள்ளது? அதன் பண்புகள் யாவை? அது ஏன் பாதிப்புக்குள்ளாகிறது? அதனைப் பாதுகாக்க வேண்டும் என்றால் யார் என்ன செய்ய வேண்டும்? என பல்வேறு கேள்விகள் எழலாம். அவற்றைப் பற்றி சிறிது அறிந்து கொள்வோம்.

ஓசோன் மூன்று ஆக்சிஜன் அணுக்களால் ஆனது. அதனை செறிவுள்ள ஆக்சிஜன் என்றும் கூறலாம். ஓசோனை உருவாக்குவது கடினம். அதனால்தான் காற்றில் அல்லது புவிமண்டலத்தில் அதன் அளவு மிகக் குறைவாக உள்ளது. மேலும் அது பூமியின் மேற்பரப்பில் 20 கிலோ மீட்டருக்கு மேல் 40 கிலோமீட்டருக்குள் ‘ஸட்ராடோஸ்பியர்’ என்று அழைக்கப்படும் ஒரு வளிமண்டல அடுக்கில் காணப்படுகிறது. ஆனால் இந்த மட்டத்தில் அது அதிகமான செறிவுடன் நெருக்கமாக ஒரு படலமாக உருவாகியுள்ளது.

இந்த ஓசோன் படலத்தின் ஒரு முக்கியமான பணி என்னவென்றால் சூரியனிடமிருந்து வரும் ஒளியில் உள்ள புறஊதாக்கதிர்களை தடுத்து நிறுத்தி பூமியின் மேற்பரப்பை அடையாமல் பார்த்துக்கொள்வதாகும். இந்த புற ஊதாக்கதிர்கள் பூமியின் மேற்பரப்பில் விழுந்தால் பல்வேறு பாதிப்புகள் உண்டாகும்.

குறிப்பாக, மனிதனின் தோல்களில் புண்கள் உண்டாகும். புற்று நோய் வரக்கூடும். தரை வாழ் மற்றும் நீர்வாழ் உயிரினங்களின் உணவு மற்றும் வளர்ச்சி பாதிப்புக்குள்ளாகும். புல், பூண்டுகள், செடி, கொடிகள் வளராமல் போகும். பூமியில் உயிரினங்கள் வாழ முடியாத நிலை வரும்.

அதனால்தான் என்னவோ ஓசோன் என்ற ஒரு வாயு படலம் இயற்கையாகவே நமக்கெல்லாம் பாதுகாப்புக் கவசமாகத் திகழ்ந்து வருகிறது.

நமக்குப் பாதுகாப்பளிக்கும் இந்த ஓசோன் படலத்துக்கு தற்சமயம் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதன் விளைவாக ஓசோன் படலத்தில் துளை ஏற்பட்டு விட்டது. சுமார் 2 கோடி சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இந்த துளை 2012-ம் ஆண்டு உருவாகியுள்ளது. இது கிட்டதட்ட அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகளின் மொத்த பரப்பளவுக்கு சமம் ஆகும்.

அதனால் புறஊதாக்கதிர்கள் பூமியை நேரடியாகத் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய பாதிப்புகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டிய அவசியம் உருவாகிஉள்ளது.

இந்த பாதிப்புகளுக்கு யார் காரணம்? நிச்சயமாக விலங்கினங்களோ, தாவரங்களோ அல்ல. மனிதர்களால் தான் இந்த பாதிப்பு உருவாகி இருக்கிறது. அதிலும் குறிப்பாக வளர்ச்சி பெற்ற அதாவது பணக்கார நாடுகளின் செயல்பாடுகள்தான் இதற்கு முக்கிய காரணமாகும். அவர்கள் பயன்படுத்தும் அறையை குளிரூட்டும் ஏ.சி. எந்திரங்கள், குளிர்சாதன பெட்டிகள், ஸ்பிரேயர்கள் போன்றவற்றில் உள்ள வேதிப்பொருள்களே இந்த அழிவை ஏற்படுத்துகின்றன.

அந்த வேதிப்பொருட்களில் சி.எப்.சி. என்று அழைக்கப்படும் குளோரோ புளுரோ கார்பன் என்னும் வேதிப்பொருளும் ஒன்றாகும். இது எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதைப் பார்க்கலாம். சி.எப்.சி.-இல் உள்ள ஒரு குளோரின் அணு, ஒரு ஓசோனோடு வினைபுரிவதில்லை; பல ஆயிரக்கணக்கான ஓசோன்களோடு வினைபுரிந்து அவற்றை ஆக்சிஜனாக மாற்றிவிடுகிறது. இதைச் சங்கிலித் தொடர்வினை என்று அழைக்கிறார்கள். இதனால்தான் அதிக அளவு சேதம் உண்டாகிறது.

இதனை அறிந்து கொண்ட விஞ்ஞானிகள் ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்காக சி.எப்.சி. பயன்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று குரல் எழுப்பினார்கள். ஆனால் இந்த செல்வந்த நாடுகளைக் கட்டுக்குள் கொண்டுவருவது யார்? என்ற பிரச்சினை எழுந்தது.

எனவே இந்தப் பிரச்சினையை ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் துறை எடுத்துக் கொண்டு 1987-ம் ஆண்டு மாண்ட்ரியல் புரோட்டாகால் என்ற ஒப்பந்தத்தை உருவாக்கியது. இதில் 197 நாடுகள் கையொப்பமிட்டன. அதில் இந்தியாவும் ஒன்று. இதன் அடிப்படையில் சி.எப்.சி. பயன்பாடு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதன் விளைவாக ஓசோனின் துளை குறைய ஆரம்பித்தது.

இதே நேரத்தில் குளிர்சாதனப்பெட்டி போன்றவை இல்லாமல் எங்களால் இருக்க முடியாது என்று பணக்கார நாடுகள் கூறியதால் விஞ்ஞானிகள், சி.எப்.சி.க்கு மாற்றாக எச்.எப்.சி. (ஹைட்ரோ புளுரோ கார்பன்) வேதிபொருளை வெளியிடும் குளிர்சாதனபெட்டிகளை அறிமுகப்படுத்த தொடங்கினார்கள். ஆனால் இதுவும் புவியின் வெப்பத்தை அதிகரித்து பாதிப்பை ஏற்படுத்தும் பொருளாகவே உள்ளது.

இதன் பயன்பாட்டால் பூமியின் வெப்பநிலை உயர ஆரம்பிக்கும். எனவே இதன் பயன்பாட்டையும் தடைசெய்ய வேண்டும் என்று குரல் ஒலிக்க ஆரம்பித்தது. அதன் விளைவாக 2016-ம் ஆண்டு ரிவாண்டா என்ற ஆப்பிக்க நாட்டின் தலைநகரான கிகாலியில் நடந்த ஐ.நா. சுற்றுப்புறச் சூழல் கூட்டத்தில் மீண்டும் ஒரு முக்கியமான முடிவு எடுக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் உலக நாடுகளை மூன்று வகையாகப் பிரித்தார்கள். வளர்ச்சி பெற்ற பணக்கார நாடுகள், வளர்ந்து வரும் நாடுகள், வெப்ப பகுதி நாடுகள் என்று அவை குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தியா அவற்றில் மூன்றாவது தொகுதியில் வெப்பப்பகுதி நாடாகவும் அதே நேரம் வளர்ந்து வரும் நாடாகவும் உள்ளது.

இங்கு ஏ.சி., குளிர்சாதனப்பெட்டி, ஏ.சி. வசதியுடைய வாகனங்களின் தேவைகள் பெருகிவருமே தவிர குறைய வாய்ப்பில்லை. குளிர் நாடுகளைப் போல் பயன்பாட்டைக் குறைக்கும் வாய்ப்பு இல்லை. இருந்த போதிலும் உலக நன்மையைக் கருதி ஓசோனைப் பாதுகாப்பதற்காக 2028-ம் ஆண்டுக்குள் எச்.எப்.சி. பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்திவிடுவோம் என்று உறுதிகூறி இந்தியா கையொப்பமிட்டுள்ளது.

கிகாலி உடன்படிக்கை 2019-ம் ஆண்டு ஜனவரி முதல் நடைமுறைக்கு வருகிறது. அமெரிக்கா 37 சதவீதம் எச்.எப்.சி.யும், சீனா 25 சதவீதம் எச்.எப்.சி.யும் பயன்படுத்தி வருகின்றன. நாம் வெறும் 3 சதவீதம் தான் இன்று வரை பயன்படுத்துகிறோம். விஞ்ஞானிகள் இந்த சவாலை வேறு விதமாக சமாளிக்க முயற்சித்து வருகிறார்கள். பாதிப்பையே ஏற்படுத்தாத புதிய வேதிப்பொருளான எச்.எப்.ஓ. (ஹைட்ரோ புளுரோ ஒலிபீன்) போன்றவற்றைக் குறைந்த செலவில் தயாரிக்க முனைப்புக்காட்டி வருகிறார்கள். இன்னும் சில ஆண்டுகளில் நல்ல முடிவு தெரியலாம். இருந்த போதிலும் இப்போது ஓசோன் படலம் பிரச்சினை தீர்வு பெறவில்லை என்றே கூற வேண்டும்.

தொழில்புரட்சி ஏற்பட்டு விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக பூமியின் வெப்பம் முன்பை விட இன்று உயர்ந்து வருகிறது. இவ்வாறு 2 டிகிரி செல்சியஸ் உயர்ந்துவிட்டால் கடுமையான விளைவுகள் உண்டாகும். பருவமாற்றங்கள் ஏற்பட்டு கோடைக் காலம் கூடலாம், அதிக மழை ஒரே நாளில் கொட்டித் தீர்க்கலாம். அதிக குளிர் ஏற்படலாம், மழையே இல்லாமல் போகலாம்.

இத்தகைய பேரழிவு ஏற்படாமல் தடுக்கும் வழிகளை எல்லா நாடுகளும் மேற்கொள்ள வேண்டும். ஓசோன் படலத்தைப் பாதுகாக்க வேண்டும். இயற்கையைக் காப்பாற்ற வேண்டும்.

- எழுத்தாளர் பாலக்குமார்

Next Story