ஏரியூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்
ஏரியூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஏரியூர்,
தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அடுத்த கெண்டையன அள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கீழ்காவக்காடு கிராமத்தில் சுமார் 150–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக குடிக்க குடிநீர் இன்றி தவித்து வந்துள்ளனர்.
மேலும் பஞ்சாயத்து நிர்வாகத்திடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நேற்று கிராம மக்கள் பென்னாகரத்தில் இருந்து மேச்சேரி செல்லும் நெடுஞ்சாலையில் காலிகுடங்களுடன் பொதுமக்கள் 150–க்கும் மேற்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பென்னாகரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் மற்றும் போலீசார், வட்டார வளர்ச்சி அலுவலர் விமலன் ஆகியோர் சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது உடனடியாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தபிறகு சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலைமறியல் காரணமாக அந்த பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.