உயர்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் நாட்டில் 4-வது தொழில்புரட்சி நடந்து வருகிறது ஜனாதிபதி பேச்சு


உயர்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் நாட்டில் 4-வது தொழில்புரட்சி நடந்து வருகிறது ஜனாதிபதி பேச்சு
x
தினத்தந்தி 16 Sept 2018 5:00 AM IST (Updated: 15 Sept 2018 11:41 PM IST)
t-max-icont-min-icon

உயர்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், நாட்டில் 4-வது தொழில்புரட்சி நடந்து வருகிறது என்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார்.

பெங்களூரு, 

உயர்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், நாட்டில் 4-வது தொழில்புரட்சி நடந்து வருகிறது என்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார்.

நாட்டுக்கு நல்ல பலன்

கர்நாடக சட்ட சங்க கல்வி நிறுவன பவள விழா பெலகாவியில் நேற்று நடைபெற்றது. இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு விழாவை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசியதாவது:-

நாட்டில் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் அவற்றின் பலன் நமக்கு இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை. இளைஞர்களால் வரும் நாட்களில் நாட்டுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

கலாசாரம், பண்பாடு

பெலகாவிக்கு நான் வருவது இதுவே முதல் முறை ஆகும். இந்த பெலகாவி நகரம் கல்வியில் நல்ல பெயர் பெற்றுள்ளது. 1892-ம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் இந்த நகருக்கு வந்தார். அவரது தாக்கம் இங்கு இன்னமும் இருக்கிறது.

இந்த பெலகாவி கலாசாரம், பண்பாட்டை பாதுகாத்துக் கொண்டு வருகிறது. வழக்கறிஞர் என்பது வெறும் தொழிலாக உள்ளது. அது நவநாகரிகமாக மாற வேண்டும். மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் போன்ற தலைவர்களும் வழக்கறிஞர் தொழில் மூலம் இந்த நாட்டுக்கு சேவையாற்றினார்கள்.

புதுமையை கண்டறிதல்

இன்றைய வக்கீல்கள் மகாத்மா காந்தி, அம்பேத்கரின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும். நாட்டின் தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா சிறப்பான முறையில் பணியாற்றி இன்னும் சில நாட்களில் ஓய்வு பெற உள்ளார். அவருக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்ட கல்லூரிகள் உயிரி நெறிமுறைகள், மரபணு பொறியியல் உள்ளிட்டவை மட்டுமின்றி ஆராய்ச்சி மற்றும் புதுமையை கண்டறிதல் குறித்தும் கற்பிக்க வேண்டும். இந்தியா தற்போது வியத்தகு மாற்றத்தின் மத்தியில் உள்ளது. இன்று நாம் எடுக்கும் முடிவுகள் எதிர்காலத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்.

உயர்கல்விக்கு முக்கியத்துவம்

கடந்த காலாண்டில் நமது பொருளாதார வளர்ச்சி 8.2 சதவீதமாக உள்ளது. தற்போது 4-வது தொழில் புரட்சி நடந்து வருகிறது. இளைஞர்களின் எண்ணமும் மாறி வருகிறது. உயர்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம்.

60 பல்கலைக்கழகங்கள் நிகர்நிலை வசதியை பெற்றுள்ளன. 20 பல்கலைக்கழகங்கள் உயர் தரத்தை பெற்றுள்ளன.

இவ்வாறு ராம்நாத் கோவிந்த் பேசினார்.

குமாரசாமி பேச்சு

இதில் முதல்-மந்திரி குமாரசாமி பேசியதாவது:-

சுதந்திர போராட்டத்தில் பெலகாவி மிக முக்கிய பங்காற்றியது. பெலகாவியில் கர்நாடகம் மற்றும் மராட்டியம் ஆகிய இரு மாநிலங்களின் கலாசாரத்தை பார்க்க முடியும். எனது இதயத்தில் பெலகாவிக்கு தனி இடம் உண்டு. அரசின் பல்வேறு துறைகளை பெலகாவிக்கு இடம் மாற்ற முடிவு செய்துள்ளோம்.

மண்டல ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்ய வட கர்நாடகத்தில் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறோம். பெலகாவியில் உள்ள இந்த சட்ட கல்லூரியில் படித்தவர்கள் இன்று மிகப்பெரிய பதவிகளில் இருக்கிறார்கள். கர்நாடகத்தில் பிற கல்வி நிறுவனங்களுக்கு இந்த கர்நாடக சட்ட சங்கம் ஒரு முன் மாதிரியாக உள்ளது.

இவ்வாறு குமாரசாமி பேசினார்.

தீபக்மிஸ்ரா

இந்த விழாவில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, கவர்னர் வஜூபாய் வாலா உள்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக தனி விமானம் மூலம் வந்த ஜனாதிபதியை பெலகாவி விமான நிலையத்தில் கவர்னர் வஜூபாய் வாலா, முதல்-மந்திரி குமாரசாமி ஆகியோர் வரவேற்றனர்.

Next Story