பொறையாறில் சமுதாய வளைகாப்பு விழா பவுன்ராஜ் எம்.எல்.ஏ. பங்கேற்பு


பொறையாறில் சமுதாய வளைகாப்பு விழா பவுன்ராஜ் எம்.எல்.ஏ. பங்கேற்பு
x
தினத்தந்தி 15 Sep 2018 10:15 PM GMT (Updated: 15 Sep 2018 6:54 PM GMT)

பொறையாறில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் பவுன்ராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மங்கள பொருட்களை வழங்கி பேசினார்.

பொறையாறு,

பொறையாறில் உள்ள சமுதாய கூடத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு பவுன்ராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலக மேற்பார்வையாளர் சகுந்தலா வரவேற்றார்.

விழாவில் 150 கர்ப்பிணி பெண்களுக்கு மங்கள பொருட்கள் மற்றும் வினா-விடை போட்டியில் வெற்றி பெற்ற கர்ப்பிணி பெண்களுக்கு பவுன்ராஜ் எம்.எல்.ஏ. பரிசுகள் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா காட்டிய வழியில் தற்போது கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படுகிறது. ஏழை-எளிய பெண்களுக்கு வளைகாப்பு நடத்த வசதி இல்லையே என்ற ஏக்கத்தை போக்கும் வகையில் சமுதாய வளைகாப்பு விழா நடத்தப் படுகிறது. பெண்களுக்கு திருமண நிதி உதவி முதல் வளைகாப்பு மகப்பேறு காலம் வரை தமிழக அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது என்றார்.

விழாவில் செம்பனார்கோவில் சுகாதார மேற்பார்வையாளர் வெங்கடேசன், சுகாதார ஆய்வாளர்கள் ராதாகிருஷ்ணன், சீனிவாசபெருமாள், கிராம சுகாதார செவிலியர் தனலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அங்கன்வாடி பணியாளர் சகிலாபானு நன்றி கூறினார்.

Next Story