அரியமான் கடற்கரையில் நடந்த சர்வதேச கடலோர தூய்மை தினம், ராமநாதபுரம் டி.ஐ.ஜி. பங்கேற்பு
அரியமான் கடற்கரையில் நடந்த சர்வதேச கடலோர தூய்மை தின நிகழ்ச்சியில் ராமநாதபுரம் டி.ஐ.ஜி. காமினி கலந்து கொண்டார்.
பனைக்குளம்,
சர்வதேச கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு உச்சிப்புளி அருகே உள்ள அரியமான் கடற்கரையில், இந்தியகடலோர காவல்படை நிலையம் சார்பாக நேற்று கடற்கரையை தூய்மைபடுத்தும் நிகழ்ச்சி கொண்டாப்பட்டது. இதில் பல்வேறு பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக ராமநாதபுரம் டி.ஐ.ஜி.காமினி கலந்துகொண்டு பேசியதாவது:–
எல்லா ஊர்களும் கடல் சார்ந்த மாவட்டமாக இருக்காது. குறிப்பிட்ட சில ஊர்கள் தான் கடல் சார்ந்தவையாகும். அதுபோல் தான் ராமநாதபுரம் மாவட்டமும். மாணவர்களாகிய நீங்கள் தான் இந்த மண்ணின் மைந்தர்கள். உங்கள் ஊரில் உள்ள கடற்கரை பகுதியையும் நீங்கள் தான் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும். கடற்கரை பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள், குறிப்பாக சாக்லேட், பிஸ்கட் பேப்பர்கள் உள்ளிட்ட எந்தவொரு பொருட்களையும் போட வேண்டாம்.
கடற்கரை மற்றும் கடலில் வீசப்படும் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளால் பல விதமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. மாணவர்கள் நீங்கள் நினைத்தால் கடற்கரை பகுதியை சுத்தமாக வைத்திருக்க முடியும். உங்கள் ஊர்களில் உள்ள கடற்கரை பகுதியை சுத்தமாக வைத்திருக்க அனைவரிடமும் சொல்லி விழிப்புணர்வடைய செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் கடலோரகாவல் படை கமான்ட்ன்ட் வெங்கடேசன் பேசியதாவது:– கடல் என்பது மூலதனம் இல்லாத இடமாகும். இந்த கடலை நம்பி ஆயிரக்கணக்கான மீனவர்கள் வாழ்ந்து வருவதுடன் கடலில் பல வகை மீன்கள், அரிய கடல் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. கடற்கரை, கடல் பகுதிகளில் எந்தவொரு குப்பைகளையும் யாரும் போட வேண்டாம். ஆகவே கடலையும், கடற்கரை பகுதியையும் சுத்தமாக வைத்திருந்து சுற்றுப்புறச் சுழலை நாம் அனைவரும் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து அரியமான் கடற்கரையில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியை டி.ஐ.ஜி.காமனி தொடங்கி வைத்தார். கமாண்டன்ட் வெங்கடேசன், சுற்றுச்சுழல் ஆர்வலர் வாசுதேவ், விவேகானந்தா கேந்திர பொறுப்பாளர் சரசுவதி, மீன்துறை உதவி இயக்குனர் கோபிநாத், உச்சிப்புளி இன்ஸ்பெக்டர் பூமா, மண்டபம் விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகள் கணபதி, ஜாகிர்உசேன் உள்பட பள்ளி, கல்லூரி மாணவர்களும், கடலோர காவல்படை வீரர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு கடற்கரை பகுதியில் கிடந்த பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் அகற்றி சுத்தம் செய்தனர்.