வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் - பொதுமக்களுக்கு நாராயணசாமி வேண்டுகோள்
பொதுமக்கள் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரி,
சர்வதேச கடலோர தூய்மை தினம் நேற்று முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 2–ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழா நேற்று காலை புதுவை கடற்கரை காந்தி திடல் அருகே நடந்தது. விழாவில் முதல்–அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு கடலோர தூய்மை தினத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:–
கடல் வளத்தை பேணிக்காப்பது நமது அனைவரின் கடமை. நமது பகுதியை சுத்தமாக வைத்திருப்பதால் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் அனைவரும் தொடர்ந்து ஒத்துழைப்பு தர வேண்டும். பாலித்தீன் பைகளை தடை செய்வதற்கு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
எனவே வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்துக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் தங்கள் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் ஆரோக்கியமாக வாழ முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக கடற்கரை தூய்மை அவசியம் குறித்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதேபோல் புதுவையில் காலாப்பட்டு முதல் புதுக்குப்பம் வரை தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.