கடைமடைக்கு தண்ணீர் வராவிட்டால் அடுத்தகட்ட போராட்டம் விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்


கடைமடைக்கு தண்ணீர் வராவிட்டால் அடுத்தகட்ட போராட்டம் விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 16 Sept 2018 3:45 AM IST (Updated: 16 Sept 2018 1:05 AM IST)
t-max-icont-min-icon

அதிகாரிகள் உறுதியளித்தபடி வருகிற 20-ந் தேதிக்குள் கடை மடைக்கு தண்ணீர் வராவிட்டால் அடுத்தகட்ட போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தஞ்சாவூர்,

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டக்குழு கூட்டம் தஞ்சை கணபதி நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் சண்முகம், துணைச் செயலாளர் சாமி.நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

கூட்டத்தில், ஒரு போக சாகுபடிக்காக கடைமடை பகுதிக்கு தண்ணீர் கேட்டு பல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 4-ந் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது 20-ந் தேதிக்குள் கடைமடைக்கு தண்ணீர் வழங்கப்படும். ஏரி, குளங்களில் தண்ணீர் நிரப்பி தரப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதிகாரிகள் உறுதியளித்தபடி 20-ந் தேதிக்குள் கடைமடைக்கு தண்ணீர் வராவிட்டால் அடுத்தகட்ட போராட்டம் நடத்தப்படும்.

விவசாய பணிகளுக்காக விவசாயிகள் அனைவருக்கும் அனைத்து கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் வழங்க வேண்டும். டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றக்கூடாது. அவ்வாறு நிறைவேற்றினால் விவசாயிகளை திரட்டி தொடர் போராட்டம் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் பழனி அய்யா நன்றி கூறினார்.

Next Story