பெட்ரோல், டீசலுக்கான வரிவிதிப்பினை 50 சதவீதம் குறைக்க வேண்டும் - விருதுநகர் வியாபார தொழில் துறை சங்கம் கோரிக்கை
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வரும் நிலையில் தமிழக அரசு அதற்கான வரிவிதிப்பை 50 சதவீதம் குறைக்க வேண்டும் என்று விருதுநகர் வியாபார தொழில்துறை சங்கம் கோரியுள்ளது.
விருதுநகர்,
விருதுநகர் வியாபார தொழில்துறை சங்கம் சார்பில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் அதிருப்தி அடைந்துள்ளனர். இருசக்கர வாகனங்கள் பயன்படுத்தும் பெரும்பாலானோர் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பஸ் மற்றும் லாரி கட்டணங்களும் அதிகரித்துள்ளதன் காரணமாக மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. மொத்தத்தில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெட்ரோல், டீசலுக்கான மூலப்பொருளான கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதால் அதன் விலையை குறைக்க இயலாது. தமிழக அரசு பெட்ரோலுக்கு 34 சதவீதமும், டீசலுக்கு 25 சதவீதமும் வரிவிதித்துள்ளது. மத்திய அரசு தான் வரியை குறைக்க வேண்டும் எண்ணாமல் தமிழக மக்கள் பயன்படும் வகையில் தமிழக அரசு பெட்ரோல், டீசலுக்கான வரிவிதிப்பினை 50 சதவீதத்தை உடனடியாக குறைக்க வேண்டும். இதன் மூலம் பெட்ரோல் டீசல் விலையை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
எனவே இதில் கவனம் செலுத்தி பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.