ஜெயங்கொண்டம் பகுதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்


ஜெயங்கொண்டம் பகுதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
x
தினத்தந்தி 15 Sep 2018 10:15 PM GMT (Updated: 15 Sep 2018 7:52 PM GMT)

வேப்பந்தட்டை, ஜெயங்கொண்டம் பகுதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் சின்னவளையம், கீழக்குடியிருப்பு, மேலக்குடியிருப்பு, அய்யனார் கோவில் தெரு, கரடிகுளம், மலங்கன்குடியிருப்பு, மேலூர், இலையூர், வாரியங்காவல், ஆண்டிமடம், மீன்சுருட்டி, தா.பழூர், உடையார்பாளையம், விக்கிரமங்கலம், தூத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 78 விநாயகர் சிலைகள் வைத்து பூஜை நடைபெற்றது. இதையடுத்து நேற்று ஜெயங்கொண்டம் வேலாயுதநகருக்கு அனைத்து விநாயகர் சிலைகளும் கொண்டு வரப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அனைத்து சிலைகளும் ஜெயங்கொண்டம் வேலாயுதநகரிலிருந்து ஊர்வலமாக பஸ்நிலையம் ரோடு, கடைவீதி, சிதம்பரம்ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக வாகனங்களில் அணைக்கரைக்கு கொண்டு சென்று கரைக்கப்பட்டது.

வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு வேப்பந்தட்டை பகுதியில் 70-க்கும் மேற்பட்ட ஊர்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்து ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகள் மற்றும் ஆறுகளில் கரைத்தனர். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அரசு பல கட்டுப்பாடுகளை விதித்ததால் பல ஊர்களில் விநாயகர் சிலை வைக்காமல் விழா கொண்டாடினர். இந்நிலையில் வேப்பந்தட்டை, பாலையூர், பெரியவடகரை, அ.மேட்டூர், தழுதாழை, தொண்டமாந்துறை, அன்னமங்கலம், கிருஷ்ணாபுரம், வெங்கலம், வெங்கனூர், வாலிகண்டபுரம், வல்லாபுரம், ரஞ்சன்குடி, எறையூர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட ஊர்களில் 5 அடி உயரம் முதல் 10 அடி உயரம் வரை விநாயகர் சிலை வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது.

காவிரி ஆற்றில் கரைத்தனர்

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வேப்பந்தட்டை, பாலையூர் உள்ளிட்ட பெரும்பாலான ஊர்களில் வாகனங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலை நேற்று ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக கொண்டு வந்தனர். அப்போது பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். பின்னர் விநாயகர் சிலைகளை பக்தர்கள் ஆரவாரத்துடன் அருகிலுள்ள நீர்நிலைகளிலும், திருச்சி காவிரியாற்றிலும் கொண்டு சென்று கரைத்தனர்.

Next Story