சென்னை பாரிமுனையில் உள்ள கந்தகோட்டம் கோவில் சொத்துகளை சரிபார்க்க ஓய்வு பெற்ற நீதிபதி நியமனம்


சென்னை பாரிமுனையில் உள்ள கந்தகோட்டம் கோவில் சொத்துகளை சரிபார்க்க ஓய்வு பெற்ற நீதிபதி நியமனம்
x
தினத்தந்தி 15 Sep 2018 10:30 PM GMT (Updated: 15 Sep 2018 7:59 PM GMT)

கந்தகோட்டம் கோவில் சொத்துகளை சரிபார்த்து கணக்கெடுக்க ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை,

சென்னையில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் பாரிமுனையில் உள்ள கந்தகோட்டம் கோவிலும் ஒன்றாகும். குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் நிர்வகித்து வந்த இந்த கோவில், கடந்த 2014-ம் ஆண்டு இந்து அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவரப்பட்டது. இந்தநிலையில் கந்தகோட்டம் கோவிலுக்கு சொந்தமாக ஏராளமான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், நிலங்கள், கட்டிடங்கள், வங்கி முதலீடு ஆகியவை உள்ளன. இதற்கிடையே கோவிலுக்கு சொந்தமான சொத்துகள் அபகரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதைத்தொடர்ந்து, கோவில் சொத்துக்களை கணக்கெடுத்து அவற்றை சரிபார்க்க உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்து அறநிலையத்துறை சார்பில் கூடுதல் அரசு வக்கீல் எம்.மகாராஜா ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, ‘கந்தகோட்டம் கோவில் சொத்துகளை சரிபார்த்து கணக்கெடுக்க ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி என்.பாலசுப்பிரமணியம் நியமிக்கப்படுகிறார். அவர் கோவில் சொத்துகளை மதிப்பீடு செய்யும் பணியை மேற்கொள்ள வேண்டும். அவருக்கு அதிகாரிகள் உரிய ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். வழக்கு விசாரணை அடுத்த மாதம் (அக்டோபர்) 3-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டார்.

Next Story