வெளிநாடுகளில் இருந்து நூதனமுறையில் கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.18 லட்சம் தங்கம் சிக்கியது


வெளிநாடுகளில் இருந்து நூதனமுறையில் கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.18 லட்சம் தங்கம் சிக்கியது
x
தினத்தந்தி 16 Sept 2018 4:30 AM IST (Updated: 16 Sept 2018 1:43 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு நூதன முறையில் கடத்தி வரப்பட்ட ரூ.18 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் வந்திறங்கிய சென்னையை சேர்ந்த குத்தூஸ் (வயது 35) என்பவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், ஷேவிங் செய்ய பயன்படுத்தும் கிரீம் மற்றும் கருவிகள் இருந்தன.

சந்தேகத்தின்பேரில் அதை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ஷேவிங் கிரீம் மற்றும் கருவிகளுக்குள் தங்க கட்டிகளை மறைத்து வைத்து நூதன முறையில் கடத்தி வந்தது தெரிந்தது. மேலும் அவரது உள்ளாடையில் தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்ததையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள 200 கிராம் தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

கைப்பிடிக்குள் தங்க கம்பிகள்

இதேபோல் மலேசியாவில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த உமர்அப்துல்லா(36) என்பவரின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது அவரிடம் இருந்த பையில் உள்ள ‘டிராலியின்’ கைப்பிடிக்குள் தங்க கம்பிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள 160 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கொழும்பு விமானம்

கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணித்த ஆந்திராவைச்சேர்ந்த ராஜேஸ்வரன்(41) என்பவரை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், அவர் உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.6 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 250 கிராம் எடைகொண்ட தங்க கட்டிகளை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

இதையடுத்து பிடிபட்ட 3 பேரிடம் இருந்தும் ரூ.18 லட்சம் மதிப்புள்ள 610 கிராம் தங்கத்தை கைப்பற்றிய சுங்க இலாகா அதிகாரிகள், இவற்றை யாருக்காக வெளிநாடுகளில் இருந்து கடத்தி வந்தனர்?. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story