செங்கோட்டையில் பதற்றம் நீடிப்பு: தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு


செங்கோட்டையில் பதற்றம் நீடிப்பு: தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 16 Sept 2018 4:00 AM IST (Updated: 16 Sept 2018 1:48 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டையில் நேற்றும் பதற்றம் நீடித்ததால் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கோட்டை, 

செங்கோட்டையில் நேற்றும் பதற்றம் நீடித்ததால் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஊர்வலத்தில் கலவரம்

விநாயகர் சதுர்த்தியையொட்டி செங்கோட்டை மேலூர் பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது. அப்போது விநாயகர் சிலை மீது கற்கள் வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்தது. ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இச்சம்பவத்தில் போலீசார், பொதுமக்கள் என 10-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். 30-க்கும் மேற்பட்ட கார்கள், மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோக்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

2-வது நாளாக நேற்று முன்தினமும் அங்கு பதற்றம் நீடித்தது. கலெக்டர் ஷில்பா மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் விநாயகர் சிலை ஊர்வலம் அங்கிருந்து புறப்பட்டு மேல பஜார் பகுதியில் வந்த போது கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் வாகனங்கள் மீதும் கல் வீசப்பட்டது. சூப்பர் மார்க்கெட் கடை அடித்து நொறுக்கப்பட்டது. மோட்டார் சைக்கிள்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதையடுத்து போலீசார் மீண்டும் தடியடி நடத்தி அங்கிருந்தவர்களை கலைத்தனர். மேலூர் பகுதியில் ஒரு வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

மேலும் ஒரு பெட்ரோல் குண்டு வீச்சு

இச்சம்பவங்களை தொடர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவில் செங்கோட்டை அருகே பிரானூர் பார்டரில் உள்ள ஒரு கடையின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் அந்த கடையின் கதவுகள் எரிந்து நாசமானது. இதுகுறித்து செங்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. இதனால் செங்கோட்டை பகுதியில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை உருவானது.

இந்த நிலையில் செங்கோட்டையில் நேற்று ஒரு சில கடைகளை தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. செங்கோட்டை கிருஷ்ணன் கோவில் தெருவில் ஆட்டோவில் வந்த மர்மநபர்கள் 2 பேர், அங்கு நின்றிருந்த ஒரு காரின் கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பிச் சென்றனர். தொடர்ந்து பதற்றம் நீடித்தது. இதனால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

ஆலோசனை கூட்டம்

இந்த சம்பவம் தொடர்பாக செங்கோட்டை போலீஸ் நிலையத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் தலைமை தாங்கி பேசினார். பின்னர், எந்தெந்த பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தி, அதன்படி அந்தந்த பகுதிகளுக்கு போலீசாரை பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், செங்கோட்டையில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் கல்வீச்சு சம்பவங்கள் தொடர்பாக நேற்று மாலை வரை (அதாவது நேற்று முன்தினம்) 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இருதரப்பினரும் கொடுக்கும் புகார்களை ஏற்றுக் கொண்டு, வழக்குகளுக்கு தகுந்தபடி விசாரணை செய்து வருகிறோம். மேலும் ஊர்வலத்தில் கல்வீச்சு சம்பந்தமாக இருபிரிவுகளை சேர்ந்த சுமார் 15-க்கும் மேற்பட்டவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடக்காத வண்ணம் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

தாலுகா அலுவலகத்தை முற்றுகை

இந்தநிலையில் நேற்று மாலை செங்கோட்டை மேலூர் பகுதியை சேர்ந்த அனைத்து இந்து சமுதாயத்தினர் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திடீரென தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் தாலுகா அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் தென்காசி உதவி கலெக்டர் சவுந்தர்ராஜ், செங்கோட்டை தாசில்தார் வெங்கடாசலம் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் அதனை ஏற்க மறுத்து, தங்களது கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து கோஷமிட்டனர். உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, அதுதொடர்பான கோரிக்கை மனுவை கலெக்டரிடம் கொடுக்க வேண்டும். அவர் இங்கு வரும் வரை நாங்கள் இந்த இடத்தை விட்டு கலைந்து செல்ல மாட்டோம் என வலியுறுத்தி வெகு நேரமாக அங்கேயே அமர்ந்திருந்தனர். மேலும் பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் கருத்து முருகன், நகர தலைவர் மாரியப்பன் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகளிடமும், அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Next Story