தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2 பெண்களிடம் கொள்ளை தொடரும் சம்பவங்களால் பயணிகள் அச்சம்


தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2 பெண்களிடம் கொள்ளை தொடரும் சம்பவங்களால் பயணிகள் அச்சம்
x
தினத்தந்தி 15 Sep 2018 11:15 PM GMT (Updated: 15 Sep 2018 8:28 PM GMT)

ஆந்திராவில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2 பெண்களிடம் கொள்ளை அரங்கேறியுள்ளது.

சென்னை,

ஆந்திராவை சேர்ந்தவர் சுதீஷ் என்பவரின் மனைவி கீதா(வயது 22). இவர் நேற்று முன்தினம் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மூலம் புறப்பட்டார். ரெயில் ஓங்கோல் நிலையத்தில் நேற்று அதிகாலை நின்றபோது, தூங்கிக்கொண்டிருந்த கீதாவின் கழுத்தில் கிடந்த சங்கிலியை மர்ம ஆசாமி ஒருவர் ஜன்னல் வழியாக பறிக்க முயற்சித்தார்.

சுதாரித்து கொண்ட கீதா சங்கிலியை காப்பாற்ற மர்ம ஆசாமியிடம் போராடினார். இந்த போராட்டம் வலுக்கவே சங்கிலியை இனி பறிக்க வாய்ப்பில்லை என மர்ம ஆசாமி நினைத்தார். கிடைத்த வரை லாபம் என்ற வகையில் சங்கிலியை விட்டு, கீதா அருகே இருந்த கைப்பையை லபக்கென எடுத்துக்கொண்டு மர்ம ஆசாமி ஓட்டம் பிடித்தார். இந்த கைப்பைக்குள் ரூ.25 ஆயிரம் பணம் மற்றும் செல்போன் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடரும் சம்பவங்கள்

அதே தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று அதிகாலை நடந்த இன்னொரு சம்பவத்தில் தஞ்சாவூரை சேர்ந்த மைதிலி(35) என்பவரிடம் 7 பவுன் தங்க சங்கிலி மர்ம நபரால் பறிக்கப்பட்டது. இந்த சம்பவமும் ஓங்கோலில் ரெயில் நிலையத்திலேயே அரங்கேறியது. மேற்கண்ட இரு சம்பவங்கள் குறித்து சென்டிரல் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்குகள் ஓங்கோல் ரெயில்வே போலீசாருக்கு மாற்றப்பட்டது.

சமீபகாலமாக ஓங்கோல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் ரெயில் கொள்ளைகள் அதிகளவில் நடந்து வருகின்றன. குறிப்பிட்ட சிலர் தான் இந்த தொடர் திருட்டில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று தெரியவந்துள்ளது. கடந்த 10 நாட்களில் சென்னை வந்த 2 பயணிகளிடம் பல லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணங்களை இந்த பகுதியில் மர்ம நபர்கள் திருடியுள்ளனர். இந்த நிலையில் 3-வது முறையாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதால் ரெயில் பயணிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மேலும் எந்த வித அசம்பாவித சம்பவங்கள் நடக்கும் முன்னர் அந்த ரெயில் திருட்டில் ஈடுபடும் மர்ம ஆசாமிகளை பிடித்து தண்டிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story