சென்னை புறநகர் பகுதிகளில் வெள்ள பாதிப்பை தடுக்க ஏரிகளின் உபரிநீரை கால்வாய் வழியாக கொண்டு செல்ல ரூ.86 கோடியில் திட்டம்


சென்னை புறநகர் பகுதிகளில் வெள்ள பாதிப்பை தடுக்க ஏரிகளின் உபரிநீரை கால்வாய் வழியாக கொண்டு செல்ல ரூ.86 கோடியில் திட்டம்
x
தினத்தந்தி 15 Sep 2018 11:00 PM GMT (Updated: 15 Sep 2018 8:31 PM GMT)

சென்னை புறநகர் பகுதிகளில் ஏரிகளின் உபரிநீரை கொண்டு செல்ல ரூ.86 கோடியில் விரைவில் கால்வாய் அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாம்பரம்,

கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தால் சென்னை புறநகர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. புறநகர் பகுதியில் உள்ள ஏரிகளில் இருந்து வெளியேறிய வெள்ளநீர், முறையான கால்வாய்கள் இல்லாததாலும், இருக்கின்ற கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்ததாலும் குடியிருப்புகளுக்குள் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

மேலும் இந்த வெள்ள பாதிப்புக்கு அடையாறு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளமும் முக்கிய காரணமாக இருந்தது. இதையடுத்து காஞ்சீபுரம் மாவட்டத்தில் வெள்ளதடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து உள்ளது.

அதன்படி மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியும், காஞ்சீபுரம் மாவட்ட வெள்ளதடுப்பு கண்காணிப்பு அதிகாரியுமான அமுதா, காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா ஆகியோர் அரசின் அனைத்துத்துறை அதிகாரிகளுடன் நேரிடையாக ஆய்வுசெய்து வெள்ளதடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை செய்து வருகின்றனர்.

ரூ.86 கோடியில் கால்வாய்

வெள்ளத்தின்போது சென்னை புறநகர் பகுதி மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட காரணமாக இருந்த அடையாறு ஆற்றுப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, தற்போது ஆற்றின் இருகரைகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது. அடையாறு ஆறு சீரமைப்பு பணிகள் பெருமளவு முடிந்துவிட்டது.

தற்போது ஏரிகளில் இருந்து வெளியேறும் வெள்ளநீரால் குடியிருப்பு பகுதிகள் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள ஏரிகளில் இருந்து வெள்ளநீரை கரைகள் உடையாமலும், குடியிருப்பு பகுதிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமலும் சீரானமுறையில் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்காக ஏரிகளின் உபரிநீரை இணைக்கும் வகையில் ரூ.86 கோடியில் பூமிக்கடியில் கான்கிரீட் மூடியுடன் கூடிய(கட் அண்டு கவர்) கால்வாய்அமைக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டு அரசு அனுமதியுடன் விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிலம் கையகப்படுத்த திட்டம்

இந்த திட்டத்தின் மூலம் சேலையூர் ஏரியில் இருந்து சிட்லபாக்கம் வழியாக கால்வாய் அமைத்து செம்பாக்கம் ஏரிக்கு உபரிநீர் கொண்டு செல்லவும், பீர்க்கன்காரணை ஏரியில் இருந்து தாம்பரம் பைபாஸ் சர்வீஸ் சாலையில் வரும் வெள்ளநீர் கால்வாய் மூலம் அடையாறு ஆறு வரைகொண்டுசெல்லவும், பெருங்களத்தூர் பகுதியில் இருந்து பாப்பன் கால்வாய் வழியாக உபரிநீரை அடையாறு ஆறுவரை கொண்டு செல்லவும் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது.

நன்மங்கலம் ஏரி, கீழ்கட்டளை ஏரி, நாராயணபுரம் ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரிநீர் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லாமல் ஒன்றோடுஒன்று இணைப்பு ஏற்படுத்தும் வகையில் கால்வாய்கள் அமைக்கவும், இதற்காக நிலம் கையகப்படுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

இதேபோல வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, ஆதனூர் பகுதிகளில் பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்க ஊரப்பாக்கம், ஆதனூர் ஏரிகளில் இருந்து உபரிநீரை கால்வாய்கள் மூலம் வெளியேற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. சேலையூர், மண்ணிவாக்கம், மணிமங்கலம், நன்மங்கலம், ஒட்டியம்பாக்கம், ஓரத்தூர் ஏரிகளிலும் வெள்ளநீர் சீராக வெளியேறும் வகையில் பல்வேறு பணிகள் செய்யப்பட உள்ளதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வடகிழக்கு பருவ மழை தொடங்கும் முன்பு இந்த பணிகளை அரசு செய்து முடிக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story