ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி புற்றுநோயால் அவதி சிகிச்சை அளிக்க மறுப்பதாக மனைவி மீது புகார்


ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி புற்றுநோயால் அவதி சிகிச்சை அளிக்க மறுப்பதாக மனைவி மீது புகார்
x
தினத்தந்தி 15 Sep 2018 11:15 PM GMT (Updated: 15 Sep 2018 8:34 PM GMT)

மூளை புற்றுநோயால் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி அவதி அடைந்துள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்க மனைவி மறுப்பதாக சகோதரிகள் புகார் அளித்துள்ளனர்.

சென்னை,

தமிழக போலீஸ்துறையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி கடந்த மார்ச் மாதம் ஓய்வு பெற்றவர் சாம் பிரியகுமார்(வயது 59). இவர் சென்னை ஆவடி பருத்திப்பட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

தற்போது சாம் பிரியகுமார் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருடைய கை, கால்கள் செயல் இழந்து படுத்த படுக்கையாக உள்ளார். அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மீட்டு சிகிச்சை அளிக்க...

இதுதொடர்பாக சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியை சேர்ந்த சாம் பிரியகுமாரின் சகோதரிகள் ஷீலா, மலர்கொடி, அமலா ஆகிய 3 பேர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

சாம் பிரியகுமார் பணியில் இருந்து ஓய்வு பெற்றவுடன் உடல் நலம் பாதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு மூளையில் புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. எனினும் அவருடைய மனைவி ஜெயா உரிய மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யாமல் வீட்டிலேயே வைத்துள்ளார். இதுதொடர்பாக திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது சாம் பிரியகுமார் உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருகிறார். எனவே ஜெயாவிடம் இருந்து சாம் பிரியகுமாரை மீட்டு உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு புகாரில் கூறப்பட்டிருந்தது.

மனைவி மறுப்பு

சாம் பிரியகுமார் சகோதரிகளின் குற்றச்சாட்டை ஜெயா மறுத்துள்ளார். தனது கணவர் சாம் பிரியகுமாரை காப்பாற்றுவதற்காக தொடர்ந்து போராடி வருகிறேன் என்று கூறியுள்ளார்.

இந்த புகார் மனு தொடர்பாக சாம் பிரியகுமாரின் உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விவரங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

சாம் பிரியகுமார் நேர்மையாக பணியாற்றி மக்களின் பாராட்டுகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story