விநாயகர் சிலையை கரைக்க சென்ற போது காவிரி ஆற்றில் மூழ்கிய கல்லூரி மாணவரின் கதி என்ன? தேடும் பணி தீவிரம்


விநாயகர் சிலையை கரைக்க சென்ற போது காவிரி ஆற்றில் மூழ்கிய கல்லூரி மாணவரின் கதி என்ன? தேடும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 16 Sept 2018 5:15 AM IST (Updated: 16 Sept 2018 2:07 AM IST)
t-max-icont-min-icon

தேவூர் அருகே விநாயகர் சிலையை கரைக்க சென்ற போது, காவிரி ஆற்றில் மூழ்கிய கல்லூரி மாணவரின் கதி என்ன? என்பது தெரியவில்லை. அவரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

தேவூர்,

சேலம் ஜங்ஷன் அருகே உள்ள போடிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவருடைய மகன் ஜீவா (வயது 21). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி., கணினி அறிவியல் 3-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று போடிநாயக்கன்பட்டி பகுதியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் கரைப்பதற்காக ஊர்வலமாக தேவூர் அருகே உள்ள கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக ஒரு வேனில் அந்த பகுதியை சேர்ந்த 20 பேர் சென்றனர். அவர்களில் ஜீவா மற்றும் அவரது நண்பர்களான சித்தையன் மகன் கார்த்திவேல் (20), பாலமுருகன் மகன் இளவரசன் (20), சிவசண்முகம் மகன் கவுதம் (19) ஆகியோரும் சென்றிருந்தனர்.

சிலைகளை கரைப்பதற்காக கார்த்திவேல், பாலமுருகன், ஜீவா, கவுதம் ஆகியோர் ஆற்றில் இறங்கினார்கள். அப்போது அவர்கள் 4 பேரும் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர். இதனால் அவர்கள் தண்ணீரில் மூழ்கினார்கள். இதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் சிலர் கார்த்திவேல், பாலமுருகன், கவுதம் ஆகிய 3 பேரையும் காப்பாற்றினார்கள். ஆனால் ஜீவாவை மீட்க முடியவில்லை. அவரது கதி என்ன? என்பது தெரியவில்லை.

இது குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். இதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று ஜீவாவை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும் சங்ககிரி தாசில்தார் அருள்குமார், தேவூர் வருவாய் ஆய்வாளர் முனிசிவபெருமாள் உள்பட வருவாய்த்துறையினர், போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். நேற்று இரவு வரை மாணவர் ஜீவா கிடைக்கவில்லை. இதனால் அவரை தேடும் பணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் தொடங்கும் என போலீசார் தெரிவித்தனர்.

Next Story