பேரம்பாக்கம் அருகே விவசாயி வீட்டில் நகை திருட்டு


பேரம்பாக்கம் அருகே விவசாயி வீட்டில் நகை திருட்டு
x
தினத்தந்தி 16 Sept 2018 2:18 AM IST (Updated: 16 Sept 2018 2:18 AM IST)
t-max-icont-min-icon

பேரம்பாக்கம் அருகே விவசாயி வீட்டில் நகை, வெள்ளிப்பொருட்கள் திருட்டு போனது.

திருவள்ளூர்,

பேரம்பாக்கம் அருகே உள்ள செஞ்சி மதுரா கண்டிகையை சேர்ந்தவர் வேணு (வயது 40). விவசாயி. இவரது மனைவி பிரபாவதி (38). இவர்களுக்கு தியாகராஜன், கருணாகரன் என 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் வேணு தன் வீட்டின் அருகில் உள்ள தன்னுடைய வயலை பார்ப்பதற்காக மனைவியுடன் சென்றார்.

அவரது மகன் தியாகராஜன் வெளியே சென்று விட்டார். மற்றொரு மகனான கருணாகரன் உடல்நிலை சரியில்லாததால் வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டு தூங்கி கொண்டு இருந்தார். சிறிது நேரம் கழித்து வயலுக்கு சென்ற கணவன், மனைவி இருவரும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

நகை திருட்டு

பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் தங்க நகையும், ¼ கிலோ வெள்ளிப்பொருட்களும், ஒரு செல்போனும் திருட்டு போனது தெரியவந்தது.

இதுகுறித்து வேணு கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story