தற்காலிக பட்டாசு கடை வைப்பவர்கள் விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை கலெக்டர் பிரபாகர் எச்சரிக்கை


தற்காலிக பட்டாசு கடை வைப்பவர்கள் விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை கலெக்டர் பிரபாகர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 15 Sep 2018 10:45 PM GMT (Updated: 15 Sep 2018 8:53 PM GMT)

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை வைப்பவர்கள் விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கிருஷ்ணகிரி,

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை வைக்கும் கட்டிடம் கல் மற்றும் தார்சு கட்டிடமாக இருக்க வேண்டும். எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களினால் கட்டப்பட்டதாக இருக்கக் கூடாது. தற்காலிக உரிமம் கோரும் ஒவ்வொரு கடைகளுக்கு இடையே 3 மீட்டர் இடைவெளி விட்டு இருக்க வேண்டும். மேலும் அருகில் குடியிருப்புகள் இருக்க கூடாது. நிரந்தர பட்டாசு கடை உள்ள இடங்களில் 15 மீட்டர் சுற்றளவில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க உரிமம் கோர கூடாது. உரிமம் பெற்றவர்கள் உரிமத்தில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் பட்டாசு இருப்பு வைத்துக் கொள்ளக்கூடாது. அவசர காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து உரிமதாரரும், அவரது பணியாளர்களும் தெரிந்திருக்க வேண்டும். தணிக்கை அலுவலர் கடையை தணிக்கை செய்து விதிமுறைகளின்படி தெரிவிக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உரிமம் கோருபவர் மேற்கொள்ள வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட வணிகர்களிடம் மட்டுமே பட்டாசு இனங்கள் வாங்கி விற்பனை செய்ய வேண்டும். விண்ணப்ப படிவங்கள் மற்றும் உரிமத்தொகை செலுத்தும் தலைப்பு ஆகியவைகளை சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளவும். மனுதாரர்களோ அல்லது மனுதாரர்களின் அதிகாரம் பெற்ற பிரதிநிதிகள் மட்டுமே மனுக்களை அளிக்க வேண்டும். உரிமம் பெற்றுத்தருவதாக செயல்படும் இடைத்தரகர்கள் யாரையும் நம்ப வேண்டாம். அரசின் விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். தற்காலிக பட்டாசு கடை வைப்பவர்கள் விதிமுறைகளை மீறினால் உரிமம் ரத்து செய்யப்பட்டு, அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story