தீபாவளிக்கு தற்காலிக பட்டாசு கடைகளுக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஷில்பா தகவல்


தீபாவளிக்கு தற்காலிக பட்டாசு கடைகளுக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஷில்பா தகவல்
x
தினத்தந்தி 16 Sept 2018 3:51 AM IST (Updated: 16 Sept 2018 3:51 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கு தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கு தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறிஇருப்பதாவது:–

நேரடி விண்ணப்பம் 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வணிகர்கள் வெடிபொருள் சட்ட விதிகளின்படி பட்டாசு சில்லரை விற்பனை செய்ய ஆன்லைன் மூலம் ஒரு மாதத்திற்கு முன்பாக விண்ணப்பம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது. எனவே வருகிற நவம்பர் மாதம் 6–ம் தேதி தீபாவளி பண்டிகையின்போது நெல்லை மாவட்டத்தில் (மாநகர் தவிர) தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர் விதிமுறைகளை கடைப்பிடித்து செயல்பட வேண்டும்.

வெடிபொருள் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் படிவம் AE–5–ல் விண்ணப்பத்தை 5 நகல்கள் பூர்த்தி செய்து, ரூ.2–க்கான நீதிமன்ற கட்டண வில்லை ஒட்டியும், உரிமக்கட்டணமாக ரூ.500 அரசு கருவூலத்தில் செலுத்தி சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் கடையின் வரைபடம், புகைப்படம் –2, வீட்டு வரி ரசீது, வாடகை ஒப்பந்த பத்திரம் மற்றும் அதன் வீட்டு வரி ரசீது நகல், சொந்த கட்டிடமார இருந்தால் வீட்டு வரி ரசீது நகல், நெல்லை மாவட்ட சுகாதார பணி துணை இயக்குனரின் தடையின்மை சான்று ஆகியவற்றுடன் 5 பிரதிகளுடன் வருகிற 28–ந்தேதிக்குள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

பாதுகாப்பான இடம் 

உரிமம் கேட்டு விண்ணப்பம் செய்வோர், பட்டாசு கடை நடத்தும் இடத்தை பொதுமக்களுக்கு சிரமம் இல்லாமலும், பாதுகாப்பான இடமாக தேர்வு செய்து அத்தகைய ஆட்சேபணை இல்லாத இடத்திற்கு மட்டும் விண்ணப்பம் செய்ய வேண்டும். ஏற்கெனவே சென்ற ஆண்டு உரிமம் பெற்ற நபர்கள் அதே இடத்தில் கடை வைக்க உரிமம் பெற விண்ணப்பம் செய்தால் ஏற்கெனவே வழங்கப்பட்ட உரிமத்தையும் விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

Next Story