ரூ.1 கோடி கேட்டு தேசிய உழவர் உழைப்பாளர் கழக நிறுவனருக்கு கொலை மிரட்டல்


ரூ.1 கோடி கேட்டு தேசிய உழவர் உழைப்பாளர் கழக நிறுவனருக்கு கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 15 Sep 2018 10:21 PM GMT (Updated: 15 Sep 2018 10:21 PM GMT)

தேசிய உழவர் உழைப்பாளர் கழக நிறுவனர் ஜோதிக்குமாருக்கு ரூ.1 கோடி கேட்டு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

வேலூர், 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் ஜோதிக்குமார். இவர் தேசிய உழவர் உழைப்பாளர் கழக நிறுவனர். இவர் சமீபத்தில் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தன்னிடம் காட்பாடியை சேர்ந்த பிரபல ரவுடியான ஜானி என்பவர் ரூ.1 கோடி கேட்டு கொலை மிரட்டல் விடுப்பதாக புகார் ஒன்று அளித்தார்.

அந்த மனு குறித்து போலீசாரிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-

காட்பாடி வண்டறந்தாங்கல் பகுதியை சேர்ந்த பிரபலரவுடி ஜானி மீது ஆள் கடத்தல், கொலை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளது. இவர் தேசிய உழவர் உழைப்பாளர் கழக நிறுவனர் ஜோதிக்குமாரிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளார் என புகார் வந்தது. அதில், அவருடைய செல்போனுக்கு கடந்த சில நாட்களாக வெவ்வேறு எண்களில் இருந்து தொடர்பு கொண்ட மர்மநபர் தன்னை அறிமுகப்படுத்தாமல் மிரட்டி வந்துள்ளார்.

ரூ.1 கோடி கேட்டு...

இந்த நிலையில் மீண்டும் அவரை தொடர்பு கொண்ட அந்த நபர் நான் காட்பாடியை சேர்ந்த ரவுடி ஜானி என்றும், வேலூர் மாவட்டத்தில் அரசியல் பணி தொடர்ந்து செய்ய வேண்டும் என்றால் எனக்கு ரூ.1 கோடி தர வேண்டும் என்றும் ஜோதிக்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் அந்த நபர் வேலூர் மாவட்ட செயலாளர் ராஜேசை தொடர்பு கொண்டு ஜோதிக்குமாரிடம் இருந்து பணம் வாங்கி தர வேண்டும் இல்லையென்றால் உன்னையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார். இதையடுத்து ஜோதிக்குமார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமாரிடம் புகார் மனு அளித்தார்.

ரவுடி ஜானியா?

ஜோதிக்குமாருக்கு தொடர்ந்து மிரட்டல் வந்ததால் அவருக்கும், வேலூர் ஆரணி சாலையில் உள்ள அவரது கட்சி அலுவலகத்துக்கும், ஆரணியில் உள்ள வீட்டிற்கும் போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தநபர் ரவுடி ஜானியா?, அல்லது ரவுடி ஜானிக்கும் அவருக்கும் தொடர்பு உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story