வேலூர் பெண்கள் ஜெயிலில் செல்போனை மறைத்து கொண்டு சென்ற பெண் காவலர் பணியிடை நீக்கம்


வேலூர் பெண்கள் ஜெயிலில் செல்போனை மறைத்து கொண்டு சென்ற பெண் காவலர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 16 Sept 2018 3:58 AM IST (Updated: 16 Sept 2018 3:58 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் பெண்கள் ஜெயிலில் செல்போனை மறைத்து கொண்டு சென்ற முதல்நிலை பெண் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வேலூர்,

சென்னை புழல் ஜெயிலில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வரும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து சிறைத்துறை உயர்அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஜெயிலில் கைதிகள் சொகுசுவாழ்க்கை வாழ்ந்தது அம்பலமானது. அங்கிருந்து 18 டி.வி.க்கள், 3 எப்.எம். ரேடியோக்கள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தநிலையில் வேலூர் பெண்கள் ஜெயிலில் முதல்நிலை பெண் காவலர் ஒருவர் ஜெயிலுக்குள் செல்போன் கொண்டு சென்றபோது கையும் களவுமாக பிடிபட்டார். அதன் விவரம் வருமாறு:-

‘ஜாக்கெட்’டுக்குள் மறைத்து...

வேலூர் தொரப்பாடியில் உள்ள பெண்கள் ஜெயிலில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி நளினி உள்பட சில முக்கிய பெண் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் பலர் அடைக்கப்பட்டுள்ளனர். ஜெயிலில் முதல்நிலை காவலராக பணியாற்றி வரும் திலகவதி (வயது 55) என்ற பெண் நேற்று காலை ஜெயிலுக்கு பணிக்காக சென்றார். அப்போது ஜெயிலுக்குள் 2-வது நுழைவு கேட்டை கடக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ஜெயில் ஊழியர் விஜயா, உள்ளே பணிக்கு செல்லும் காவலர்களை சோதனை செய்தார். அப்போது திலகவதியை சோதனை செய்தபோது அவர் அணிந்திருந்த ‘ஜாக்கெட்’டு க்குள் ஏதோ ஒரு பொருள் மறைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பின்னர் அதை வெளியே எடுத்து பார்த்த போது, அது சிறிய அளவிலான செல்போன் என்பது விஜயாவிற்கு தெரியவந்தது. பின்னர் அதை அவர் பறிமுதல் செய்தார்.

பணியிடை நீக்கம்

மேலும் இதுகுறித்து சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதிக்கு தகவல் தெரிவித்தார். அவர் விசாரணை மேற்கொண்டு திலகவதியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

மேலும் இதுகுறித்து பாகாயம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயில் அதிகாரிகள் கூறுகையில், திலகவதி ஜெயிலுக்குள் எதற்காக செல்போன் கொண்டு செல்ல முயன்றார்?, கைதிகளுக்கு சப்ளை செய்வதற்காக கொண்டு சென்றாரா? என்பது விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என்றனர்.

Next Story