சேலம் அருகே காணொலி காட்சி மூலம் மகளிர் குழுவினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்


சேலம் அருகே காணொலி காட்சி மூலம் மகளிர் குழுவினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்
x
தினத்தந்தி 15 Sep 2018 10:49 PM GMT (Updated: 15 Sep 2018 10:49 PM GMT)

சேலம் அருகே மகளிர் குழுவினருடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது அவர் தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்படுவது குறித்து கேட்டறிந்தார்.

தலைவாசல்,

தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் நேற்று முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந் தேதி வரை செயல்படுத்தப்படும் வகையில் “தூய்மையே உண்மையான சேவை” என்னும் திட்டம் புதுடெல்லியில் தொடங்கி வைக்கப்பட்டது. இதனை நேற்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

மேலும், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து 20 இடங்களில் காணொலி காட்சியின் வாயிலாக நேரடியாக தூய்மையின் அவசியம் குறித்தும், இத்திட்டத்தின் நோக்கம் குறித்தும் பிரதமர் மோடி கலந்துரையாடினார். மேலும் அவர் தூய்மை இந்தியா திட்டம் குறித்து கேட்டறிந்தார். சேலம் மாவட்டம் தலைவாசல் ஒன்றியத்துக்குட்பட்ட மணிவிழுந்தான் கிராமத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினருடன், பிரதமர் மோடி கலந்துரையாட மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

மகளிர் குழுவினர் சார்பில் நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம், வீரக்கல்புதூர் கிராமத்தைச் சேர்ந்த மகளிர் குழு ஊக்குவிப்பாளர் சுமதி, பிரதமருடன் காணொலி காட்சி மூலமாக பேசினார். அப்போது அவர் கூறுகையில், நான் கடந்த 10 வருட காலமாக சுய உதவிக்குழு உறுப் பினராக உள்ளேன். தூய்மை பாரத இயக்கம் தொடங்குவதற்கு முன்னால் எங்கள் ஊரில் உள்ள பெரும்பாலான பெண்கள் திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழித்தனர்.

பின்னர் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தனி நபர் இல்லக்கழிப்பறை அமைப்பது மானியத்திற்காக அல்ல மானத்திற்காக என்ற முழக்கத்தை முன்னிறுத்தி எடுத்துரைத்தோம். இதன் பலனாக சேலம் மாவட்டம் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லா மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், வெகு விரைவில் சேலம் மாவட்டம் இந்தியாவிலேயே சுகாதாரத்தில் முன்னோடி மாவட்டமாக திகழும் என கூறினார்.

இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி பேசும் போது, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை காவலர்கள் சிறப்பாக பணியாற்றி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. சேலம் மாவட்டம் முழுவதும் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத மாவட்டமாக மாற்றியதற்கு பாராட்டுகள். தமிழகத்தில் மட்டும் செயல்பட்டு வரும் தூய்மை காவலர் திட்டத்தை இந்தியா முழுவதும் கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன் என்றார். பிரதமர் மோடி பேசுவதற்கு முன்பாக தமிழில் வணக்கம் என்று தெரிவித்து பேசத்தொடங்கினார்.

இந்த காணொலி காட்சி உரையாடல் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ரோகிணி முன்னிலையில் நடந்தது. பிரதமர் மோடி இந்தியில் பேசியதை, சேலத்தை சேர்ந்த தேவிகா என்பவர் மொழி பெயர்த்தார். இது குறித்து ஊக்குவிப்பாளர் சுமதி கூறுகையில், பிரதமர் மோடியுடன் காணொலி காட்சி மூலம் பேசி வாய்ப்பளித்த கலெக்டருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தூய்மை இந்தியா திட்டத்தில் முதன்மை மாவட்டமாக சேலம் வருவதற்கு பாடுபடுவோம் என்று உறுதி அளித்து பேசினேன் என்றார்.

இதைத்தொடர்ந்து தலைவாசல் பஸ் நிலையத்தில் ஊக்குவிப்பாளர்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்க பிரதிநிதிகள், சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்ட மாபெரும் தூய்மை பணியை மாவட்ட கலெக்டர் ரோகிணி தொடங்கி வைத்தார். பின்னர் மணிவிழுந்தான் ஏரியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அருள்ஜோதி அரசன், உதவி கலெக்டர் வந்தனா கார்க், ஆத்தூர் உதவி கலெக்டர் செல்வன், ஒன்றிய ஆணையாளர் வெங்கட்ரமணன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் மற்றும் 20 ஊராட்சிகளை சேர்ந்த 1,200-க்கும் மேற்பட்ட மகளிர் குழு ஊக்குவிப்பாளர்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்க பிரதிநிதிகள், சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Next Story