அதிகாரிகள் சொல்வதை கேட்டால் யாராலும் ஆட்சி நடத்த முடியாது அ.தி.மு.க.துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேச்சு


அதிகாரிகள் சொல்வதை கேட்டால் யாராலும் ஆட்சி நடத்த முடியாது அ.தி.மு.க.துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேச்சு
x
தினத்தந்தி 16 Sept 2018 4:30 AM IST (Updated: 16 Sept 2018 4:30 AM IST)
t-max-icont-min-icon

அதிகாரிகள் சொல்வதை கேட்டால் யாராலும் ஆட்சி நடத்த முடியாது என்று அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேசினார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் பெருமாள் நகர் கே.ராஜன் தலைமை தாங்கினார். திருவண்ணாமலை நகர செயலாளர் ஜெ.எஸ்.செல்வம், மாவட்ட இணை செயலாளர் நளினி மனோகரன், துணை செயலாளர் என்.துரை, மாவட்ட பொருளாளர் நைனாகண்ணு, துணைச்செயலாளர் அமுதா அருணாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக துணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் எஸ்.ராமச்சந்திரன், வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கே.பி.முனுசாமி பேசியதாவது:-

ஆட்சி நடத்த முடியாது

பேரறிஞர் அண்ணாவின் வழியில் நடப்பவர்கள் அ.தி.மு.க.வினர். எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்து வெளியே வந்தபோது அண்ணாவை உள்ளடக்கி அ.தி.மு.க.வை உருவாக்கினார். அண்ணாவின் வழி வந்த எம்.ஜி.ஆர். ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் சத்துணவு திட்டத்தை உருவாக்கினார். அவரை தொடர்ந்து வந்த ஜெயலலிதா 20 கிலோ விலையில்லா ரேஷன் அரிசி, மாணவர்கள் பயன்பெறும் விலையில்லா சீருடை, சைக்கிள், லேப்டாப் போன்று எண்ணற்ற திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தினார். மேலும் பெண்களுக்கு தற்போது மானிய விலையில் ஸ்கூட்டி வழங்கும் திட்டத்தை உருவாக்கினார்.

ஜெயலலிதா, மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவதை பார்த்த சில மாநிலங்களில் அதேபோல் லேப்டாப் வழங்க திட்டம் தீட்டினர். ஆனால் அங்குள்ள அதிகாரிகள் நம்மால் இதனை செய்ய முடியாது என்று கூறியதும், அந்த திட்டத்தை கைவிட்டனர். அதிகாரிகள் சொல்வதை கேட்டால் யாராலும் ஆட்சி நடத்த முடியாது. ஜெயலலிதா சொல்வதை தான் அதிகாரிகள் கேட்டனர். ஜெயலலிதாவை கண்டால் அதிகாரிகள் பயந்தனர்.

தியாகம் இல்லாமல்...

தற்போது சினிமாவில் இருந்து ரஜினி, கமல், விஷால், விஜய் போன்றவர்கள் அரசியலுக்கு வந்து முதல்-அமைச்சர் ஆகிவிடலாம் என்ற எண்ணத்தில் உள்ளனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் இந்த இடத்துக்கு வர எவ்வளவு உழைத்து உள்ளனர் என்று உங்களுக்கு தெரியுமா?. எந்த தியாகமும் இல்லாமல் எளிதாக முதல்-அமைச்சர் ஆகி விடலாம் என்ற எண்ணத்தில் அவர்கள் உள்ளனர். உங்களால் என்ன செய்தாலும் அரசியலில் நிலைக்க முடியாது.

திராவிட கட்சியை அண்ணா உருவாக்கிய போது பெரியார் தான் நமக்கு தலைவர் என்று ஒரே கொள்கையில் இருந்தார். ஆனால் அண்ணாவிற்கு பிறகு தி.மு.க.வுக்கு தலைமை பொறுப்பிற்கு வந்த கருணாநிதி அண்ணாவின் கொள்கையை மறந்து தனக்கு தலைவர் பொறுப்பை கொடுத்து கொண்டார். தற்போது கருணாநிதிக்கு பின்னால் தளபதியாக இருந்த ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்று உள்ளார். சட்டமன்றத்தில் 2 நிமிடங்கள் கூட முழுமையாக பேச முடியாத அவர் எவ்வாறு தலைவராக இருக்க முடியும்.

எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவிற்கும் நாம் கொடுத்த மரியாதையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் வழங்க வேண்டும். அது நமது கடமை ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் வனரோஜா எம்.பி., மாவட்ட மாணவரணி செயலாளர் வெங்கடேசன், திருவண்ணாமலை ஒன்றிய செயலாளர் ஏ.கே.குமாரசாமி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் சுனில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Next Story