மீன்: வளர்க்கலாம்.. ருசிக்கலாம்.. சம்பாதிக்கலாம்..


மீன்: வளர்க்கலாம்.. ருசிக்கலாம்.. சம்பாதிக்கலாம்..
x
தினத்தந்தி 16 Sept 2018 1:25 PM IST (Updated: 16 Sept 2018 1:25 PM IST)
t-max-icont-min-icon

நமது நாட்டில் பருவமழை குறைந்து வருகிறது. அதே நேரத்தில் நீரின் தேவை வேகமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

தேவை அதிகரித்திருக்கும் நேரத்தில் நீர்வள ஆதாரங்கள் குறைந்து கொண்டிருப்பது கவனிக்கத்தகுந்த விஷய மாகும். பல இடங்களில் நீரைத் தேக்கிவைக்க அமைத்த குட்டைகள், குளங்கள், ஊரணிகள் மண் தூர்ந்து போன தாலும், வீட்டு மனைகளாக, தொழிற் கூடங்களாக மாற்றப்பட்டதாலும் நீரை தேக்கி வைப்பதற்கான ஆதாரங்கள் பெருமளவில் குறைந்துள்ளன.

இப்படிப்பட்ட சூழலில் நமது பலவிதமான தேவைகளுக் காக நிலத்தடி நீரை உறிஞ்சும் வழக்கம் பெருமளவில் அதிக ரித்துள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து, அது வேளாண்மையை பாதித்துள்ளது. குறிப்பாக சிறு குறு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். அவர்களால் இக்கட் டான நேரங்களில் பயிர்களைக் காப்பாற்ற முடியாமல் போவதோடு, கால்நடைகளையும் பராமரிக்க முடியாமல் தவித்துப் போகிறார்கள். எனவே விவசாயத்தையும், கால் நடை களையும் பாதுகாக்க வறட்சி க்கு இலக்காகும் பகுதிகளில் பண்ணைக்குட்டைகள் அமைக்கப்படுகின்றன.

இந்த திட்டத்தினால் பல நன் மைகள் இருப்பதனால், அரசும் இதனை ஊக்குவிக்க மானிய உதவிகளை அளித்து வருகிறது. மேலும் இது போன்ற திட்டங்களுக்கு பல்வேறு தொண்டு நிறுவனங்களும் உதவி புரிந்து வருகின்றன. எனவே பண்ணைக்குட்டை அமைக்கும் திட்டம் பல்வேறு தரப்பினராலும் பிரபலப்படுத்தப்பட்டு செயல்படுத் தப்பட்டு வருகிறது.

பண்ணைக் குட்டைகள் நீர் ஆதாரங்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் 900 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டவையாகவும், 1½ மீட்டர் கொண்டதாகவும் அமைக்கப் படுகின்றன. 1½ மீட்டர் ஆழத்திற்கு மண் வெட்டப்படுவதால் கரை அமைக்க தேவையான மண் கிடைத்துவிடுகிறது. அந்த மண்ணை பள்ளமான வயல்வெளி களை மேம்படுத்தவும் பயன்படுத்திக் கொள்ளலாம். விவசாயத்தை நீர்த்தட்டுப்பாடு இன்றி மேற்கொள் வதற்காகவும், கால்நடைகள் கோடையில் குடிநீர் பெறுவதற்காகவும், நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிப்பதற்கான ஒரு வழிமுறையாக பண்ணைக்குட்டைகள் அமைக்கப்பட்டாலும், கூடுதல் அனுகூலமாக பல இடங்களில் அவற்றில் நீர் நிற்கும் காலங்களில் லாபகரமாக மீன் வளர்ப்பை மேற்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.

பண்ணைக்குட்டைகளில் மீன் வளர்ப்பை மேற்கொள்வதற்கான அடிப்படைத் தொழில் நுட்பங்களை இங்கு காண்போம்.

மீன் வளர்ப்பை மேற்கொள்வதற்கு முன்பாக காய்ந்த குளங்களில் உள்ள வண்டல் பொறுக்குகளை முற்றிலும் அகற்றவேண்டும். பின்பு மண்ணின் கார அமில நிலையை அறிந்து, உகந்த கார நிலையை பராமரிக்க பண்ணைக் குட்டைக்கு சுமார் 20 கிலோ சுண்ணாம்பு இடலாம். மண்ணின் கார அமில நிலை 8-க்கும் அதிகமாக இருப்பின் சுண்ணாம்பு தேவையில்லை. அதன்பின் நான்கைந்து நாட்களுக்கு பிறகு குட்டைகளில் குறைவான அளவில் நீரை தேக்கி (அரை அடி முதல் ஒன்றரை அடி ஆழம் வரை) அடிஉரம் இடவேண்டும். அடிஉரமாக மக்கிய சாணம் இடலாம். சாண உரம் இடும்போது மக்காத வைக்கோல், இலை, தழைகள், பிளாஸ்டிக்பொருட்களை அறவே நீக்கிவிட வேண்டும்.

உரமிட்ட 4 அல்லது 5 நாட்களுக்குப்பிறகு நீரின் மட்டத்தை 3 முதல் 4 அடி வரை அதிகரிக்கலாம். பின்னர் ரசாயன உரங்களான யூரியா (3முதல் 4 கிலோ) சூப்பர் பாஸ்பேட் (5கிலோ) மற்றும் பொட்டாஷ் ( ¾ முதல் 1கிலோ) ஆகியவற்றையும் சேர்த்து இடவேண்டும். சாணம் மற்றும் ரசாயன உரங்களை நன்கு நீரில் கரைத்து அவற்றிலுள்ள கசடு பொருட்களை நீக்கி விட்டு பண்ணைக் குட்டைகளில் தெளிப்பது நல்லது. கரைக்கப்பட்ட உரச்சத்துகள் மீன்களுக்கான இயற்கை உணவு உயிரினங்களை குட்டையில் உற்பத்தி செய்வதால் நீரின் நிறம் பச்சையாக மாறும். அப்போது மீன்குஞ்சுகளை குட்டையில் இருப்பு செய்யலாம்.

மீன்குஞ்சுகளின் இருப்படர்த்தி குளத்தில் நீர் நிற்கும் காலத்தையும், வளர்ப்பு முறையையும் பொறுத்து மாறுபடுகிறது. அதிக நாட்கள் (8 மாதங்க ளுக்கு மேல்) நீர் நிற்கும் குட்டை களில் தர மான தீவனம் அளித்து ஆயிரம் மீன்குஞ்சு களை இருப்பு செய்யலாம். இவ் வகையான வாய்ப்புகள் இல்லாத குட்டை களில் 500 முதல் 600 மீன்குஞ்சுகள் போதுமானது.

இனவிகிதாச்சாரத்தை பொறுத்தமட்டில் 3 அல்லது 4 இன மீன்கள் பண்ணைக்குட்டை களுக்கு போதுமானது. பொதுவாக பண்ணைக்குட்டைகள் செங்குத்தாக, ஆழமாக அமைக்கப்படுவதால் அடிமட்ட மீன்களை குறைவாகவிட்டால் போதுமானது. குறிப்பாக கரைகளை சேதப்படுத்தும் சாதா கெண்டை மீன்களை பண்ணைக்குட்டை களில் அறவே தவிர்ப்பது நல்லது. ரோகு, கட்லா, புல் கெண்டை மீன்களை 80 முதல் 85 விழுக்காடு அளவிலும், மிர்கால் இனத்தை 15 விழுக்காடு அளவிலும் குட்டைகளில் இருப்புச்செய்யலாம்.

பண்ணை குட்டைகளில் தீவனம் சார்ந்த முறையில் மீன்களை வளர்த்தால் குறுகிய காலத்தில் அதிக உற்பத்தியை பெறலாம். உரமிட்டு, மிதமான தரம் கொண்ட உணவை கொடுத்து மீன்களை வளர்த்தால், உற்பத்தி குறைவாகவே இருக்கும். நீரின் பச்சை நிறம் குறையும்போது இயற்கை உணவுகள் உற்பத் திக்காக அவ்வப்போது தேவைக்கேற்ப குட்டைகளில் உரமிடவேண்டும். சாண உரங்களை பைகளில் கட்டி சிறிது சிறிதாக கரையுமாறு அதை செய்யவேண்டும்.

ரசாயன உரங்களை பொறுத்தமட்டில் அவற்றை சிறிதளவு தண்ணீரில் நன்கு கரைத்த பின்னர் குட்டை முழுவதும் பரவலாக தெளிக்க வேண்டும். தீவனங் களை பொறுத்தமட்டில் மிதக்கும் தீவனங்கள் அல்லது பைகளுக்குள் தீவனமிட்டு, குட்டை களில் கட்டுவது சிறந்ததாகும். இவ் வகை குட்டைகளில் அதிக அளவு கழிவுகள் அடி மட்ட த்தில் சேராமல் பார்த் துக் கொள்ள வேண்டும்.

பண்ணைக் குட்டைகள் பொதுவாக அதிக ஆழம் மற்றும் குறைந்த மேல்மட்ட பரப்பளவு கொண்டதாக அமைக்கப்படுவதால் அவற் றிற்கு சூரிய வெளிச்சம் மற்ற குளங்களைப்போல் அதிகமாக கிடைப்பதி ல்லை. அதனால் குட்டை களில் நிற்கும் நீர் மட்டங் களில் வெப்ப வேறுபாடு ஏற்பட்டு அதன் காரணமாக உயிர்வளிப்பற்றாக்குறை (குறிப்பாக அடி மட்டத்தில்) ஏற்படலாம். இந்நிலையில் அடிமட்டத்தில் அதிக அளவில் கழிவுகள் சேர்ந் தால் நீர் நச்சுத் தன்மை அடைந்துவிடும். எனவே கழிவுப்பொருட்கள் அடிமட்டத்தில் அதிகம் சேராத வகையில் குட்டைகளில் உரம் மற்றும் உணவு இடவேண்டும். குட்டைகளின் அடிமட்டத்தில் பிராணவாயு பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்க அவ்வப்போது அடி மட்ட நீரை பம்பிங் செய்து அந்த நீரை குட்டையின் மேல் மட்ட நீரோடு சீராக கலக்குமாறு செய்யலாம். இந்த நடவடிக்கையை கோடை காலங் களிலும், வளர்ப்பு நிலையின் இறுதிக் காலங் களிலும் அடிக்கடி மேற் கொள்வது நல்லது.

பண்ணைக் குட்டைகளில் முறையாக மீன் வளர்ப்பை மேற் கொண்டால் ஆண் டிற்கு 300 முதல் 600 கிலோ மீன்களை பெற லாம். இதன் மூலம் ஆண்டொன்றுக்கு குட்டைக்கு ரூ.15,000 முதல் ரூ.30,000 வரை நிகர வருவாய் பெற வாய்ப்பிருக்கிறது. மேலும் கரைகளில் பணப் பயிர்களான தென்னை மற்றும் வாழை வளர்ப் பதன் மூலம் கூடுதல் வருவாய் பெறலாம்.

- தொடரும்.

கட்டுரை: பேராசிரியர்கள் குழு, தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், நாகப்பட்டினம். 

Next Story