மாவட்ட செய்திகள்

ஜெர்மனி பெண்களின் தமிழ்த் தேடல் + "||" + search in tamil by germany women

ஜெர்மனி பெண்களின் தமிழ்த் தேடல்

ஜெர்மனி பெண்களின் தமிழ்த் தேடல்
‘‘உலகில் எல்லா இடங்களிலும் பயன்பாட்டில் இருக்கும் அனைத்து பொருட்களுக்கும் தமிழில் வார்த்தைகள் இருப்பது ஆச்சரியமளிக்கிறது.
தனித்தன்மையுடன் விளங்கும் தன்னிகரில்லா தமிழ் மொழியை தவிர வேறு எந்த மொழிக்கும் இத்தகைய சிறப்பு கிடையாது’’ என்று தமிழ் மொழியின் தனித்துவத்தை பற்றி பெருமை பொங்க சொல்கிறார்கள் ஜெர்மனி நாட்டை சேர்ந்த மாணவிகள்.

அவர்கள் கோலோன் பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்கள். அந்த பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளில் பெரும்பாலானோர் தமிழ் மொழியை கற்றுக்கொள்வதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள்.

அவர்களுக்கு வழிகாட்டியாக விளங்கிக் கொண்டிருக்கிறார், உல்ரீக நிக்லாஸ். இவர் அந்த பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியியல் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவரும் ஜெர்மனியை சேர்ந்தவர்தான்.

தமிழ் மொழி மீது கொண்ட தீராத காதல் இவருக்கு தமிழ் பேராசிரியை என்ற அந்தஸ்தையும் உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. அங்கு கல்வி பணியை தொடர்ந்தாலும் தமிழ்நாட்டோடு தொடர்பில் இருந்து கொண்டிருக்கிறார்.

நிக்லாஸ் ஆண்டுதோறும் ஜெர்மனி கல்லூரி மாணவிகளை இங்கு அழைத்து வந்து அவர்களுக்கு தமிழ் மொழி, கலாசாரம் பற்றி கள அனுபவம் மூலம் விளக்கிக் கொண்டிருக்கிறார். மாணவிகளும் இங்கு மக்களோடு மக்களாக கலந்து தமிழ் மொழியை கற்றுக்கொள்வதற்கு அலாதி ஆர்வம் காட்டுகிறார்கள்.

ஓலைச்சுவடிகள், தமிழ் இலக்கணம், இலக்கிய புத்தகங்கள், சங்ககால வரலாறுகள், ஆங்கிலேயர்கள் ஆட்சி காலம், இந்திய நாட்டின் விடுதலை, திராவிட இன வரலாறு போன்ற பல விஷயங்களை தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்.

தமிழ் மொழியை சகஜமாக பேசி பழகுவதோடு அல்லாமல் பாரம்பரிய பழக்க வழக்கங்கள், உடை, உணவு மற்றும் நாகரிகம் பற்றி அறிந்துகொண்டு அதன்படி தங்கள் வாழ்க்கை முறையை மாற்றியமைத் துக்கொள்ளவும் பழகிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு நிக்லாஸ் வழிகாட்டுகிறார்.

நிக்லாஸுக்கு 63 வயதாகிறது. அவர் 1981-ம் ஆண்டு முதன் முதலாக தமிழகத்திற்கு வந்திருக்கிறார். உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை நேரில் பார்த்திருக்கிறார். அது அவரை வியப்பில் ஆழ்த்தி யிருக்கிறது. அப்போது நிக்லாஸுக்கு வழிகாட்டியாக மதுரையை சேர்ந்த சரவணன் இருந்தார். தமிழர் பண்பாடும், நாகரிகமும் நிக்லாஸை கவர தமிழ்நாட்டுடன் உறவு பந்தத்தை ஏற்படுத்தி விட்டார். சரவணனும், நிக்லாஸும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

இருவரும் திருமணத்திற்கு பிறகு புதுச்சேரியில் குடியேறினார்கள். தமிழ் மீது கொண்ட தீராத காதலால் நிக்லாஸ் முறைப்படி தமிழ் மொழியை கற்று தேர்ந்திருக்கிறார். தமிழில் கல்வி தகுதியை மேம்படுத்திக்கொண்டவர் அங்குள்ள பிரெஞ்சு கல்வி நிறுவனத்தில் தமிழ் ஆராய்ச்சி யாளராகவும் பணியில் சேர்ந்தார். அங்கு 6 ஆண்டுகள் பணியாற்றி தமிழ் மொழியின் சிறப்பம்சங்கள் அனைத்தையும் தேடித் தேடி கற்று தன்னை மெருகேற்றி கொண்டார். அதைத்தொடர்ந்து ஜெர்மனி சென்றவர் அங்குள்ள பல்கலைக் கழகத்தின் இந்தியவியல் மற்றும் தமிழ் கல்வி நிறுவனத்தில் பேராசி ரியையாக பணியாற்றும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்.

கோலோன் பல்கலைக்கழகத்தில் மொழிகள் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதில் தமிழ் மொழியும் இடம் பிடித்திருக்கிறது. மேலும் தென்னிந்திய, தென்கிழக்கு ஆசிய நாடுகள் இடையே உள்ள பண்பாட்டு பரிமாற்றம் தொடர்பான ஆய்வுகளும் தொடர்ந்து வருகின்றன. அந்த ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட படிப்புகள் மூலம் தமிழ் மொழியின் தொன்மையையும், ஆளுமையையும் மாணவிகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் நிக்லாஸுக்கு உருவாகி இருக்கிறது.

தமிழ் நாட்டுடனான உறவை தொடரும் விதமாக அங்கு கல்லூரி தேர்வு முடிவடைந்து விடுமுறை விடப்படும் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் புதுவையில் உள்ள தனது வீட்டிற்கு மாணவிகளை அழைத்து வந்து கொண்டிருக்கிறார். அவர்களும் தமிழ் மொழி, கலாசாரம் குறித்து அறிந்து கொள்வதற்காக குழுவாக வந்து பயிற்சி பெற்று செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.தற்போது கோலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ் படிக்கும் விக்கி, தானாம், உஷி ஆகிய மூன்று பேர் புதுச்சேரிக்கு வந்திருக்கிறார்கள். இந்த மாதம் முழுவதும் இங்கு தங்கி இருந்து தமிழ் மொழியின் ஆளுமை மற்றும் நாகரிகம், மக்களின் பழக்க வழக்கங்களை நேரில் பார்த்து புரிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தினமும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை வகுப்புகள் நடைபெறுகிறது. அதில் முதலாவதாக தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் வழங்கப்படுகிறது. அதில் இடம்பெற்றிருக்கும் செய்திகளை வாசிக்க பழகிக்கொண்டிருக்கிறார்கள். எளிய முறையில் தமிழ் கற்க ‘தினத்தந்தி’ நாளிதழ் செய்திகளை எழுத்துக் கூட்டி படித்து வருகிறார்கள். எழுத்துப் பயிற்சிக்காக வைக்கப்பட்டுள்ள பலகையில் தமிழ் எழுத்துக்களை எழுதி பழகுகிறார்கள். உடற்பயிற்சி செய்வது, புத்தகம் படிப்பது போன்ற செயல்களிலும் ஈடுபடுகிறார்கள்.

மாணவி விக்கிக்கு 24 வயது, நிலம் மாசு குறித்த பாடப்பிரிவை தேர்வு செய்து படித்து வருகிறார். ‘‘தமிழ் மொழியை பற்றி கேள்விப்பட்டதும் அதனை கற்றுக் கொள்ளும் ஆர்வம் உண்டானது. அத்துடன் தமிழர் பண்பாடும் பிடித்துப் போனது. அதனை உணர்வுப்பூர்வமாக அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் என்னை இங்கு வரவழைத்து இருக்கிறது. நான் எதிர்பார்த்ததற்கும் மேலாக தமிழர்களின் கலாசாரம், பாரம்பரிய விழாக்கள், உணவு முறைகள், உடைகள், பழக்க வழக்கங்கள் என்னை ஆச்சரியப்படவைக்கின்றன’’ என்றார்.

21 வயதாகும் மாணவி தானாம், கோலோன் பல்கலைக் கழகத்தில் தென்னிந்திய மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் இடையே உள்ள பண்பாட்டு பரிமாற்றம் தொடர்பான பாடப்பிரிவை தேர்வு செய்து படித்து வருகிறார். இவர் தென் னிந்திய, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இடையே நடை முறையில் இருக்கும் பழக்க வழக்கங்களில் உள்ள வேறு பாடுகளை பற்றி தெரிந்துகொள்வதற்காக வந்திருக்கிறார்.

உஷி 60 வயதை கடந்தவர். மதங்களில் உள்ள வேறுபாடுகள் பற்றிய ஆய்வு படிப்பை தேர்வு செய்துள்ளார். இவருடைய கணவர் பெயர் யூர்கென். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஒரு மகன் சினிமா திரைப்பட தயாரிப்பாளர். மற்றொருவர் உஷி படிக்கும் கோலோன் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.

மூன்று பேரும் கலாசார பயணமாக தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, கன்னியாகுமரி செல்ல திட்ட மிட்டுள்ளனர். பின்பு கேரளாவுக்கு செல்கிறார்கள். செல்லும் இடங்களில் அங்கு பின்பற்றப்படும் பழக்கவழக்கங்கள், கலாசாரம், பண்பாடு பற்றி அறிந்து குறிப்பெடுத்துக் கொள்கிறார்கள்.

தமிழ் மொழியை உயிராக நேசிக்கும் நிக்லாஸ், ஒரு இழப்பை சந்தித்திருக்கிறார். கணவர் சரவணன் மரணமடைந்து விட்டார்.

‘‘உலகிலேயே தமிழ் பழமையான மொழியாக இருப்பது பெருமைக்குரிய விஷயம். தமிழர்களின் உணவு, உடை பழக்க வழக்கங்கள் போன்றவை தனித்துவமிக்க கலாசாரத்தின் அடையாளமாக இருப்பதை உணர்கிறோம். ஜெர் மனி தொழில்நுட்பத்தில் வளர்ந்த நாடாக இருந்தாலும் நாகரிகம், பண்பாட்டை ஒப்பிடும்போது தமிழர்கள் எங்களை வியப்படைய வைக்கிறார்கள். இங்குள்ளவர் கள் காட்டும் அன்பில், நட்பில் மலைத்துப்போய் நிற்கிறோம். மருந்தே உணவு என்ற வகையில் உணவு பழக்கங்களை முறைப்ப டுத்தியிருப்பது வியக்க வைக் கிறது. உடை அலங்காரம், பெரியவர்களிடத்தில் காட்டும் மரியாதை, திருமண முறை, ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாடு என எல்லாமே எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது’’ என்கிறார்கள், மூன்று மாணவிகளும்!

அவர்களது தமிழ்த்தேடலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தோம்!