பிளஸ்–1 மாணவி விஷம் குடித்து தற்கொலை
கள்ளக்குறிச்சி அருகே வீட்டு வேலை செய்யாததை பெற்றோர் கண்டித்ததால் விஷம் குடித்து மாணவி தற்கொலை செய்தார்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி அருகே உள்ள வேளாக்குறிச்சியை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 37). இவருடைய மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு ஜெயசூர்யா என்ற மகள் இருந்தார். இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார். சம்பவத்தன்று ஜெயலட்சுமிக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து ஜெயசூர்யாவை, வீட்டு வேலை செய்யும்படி தாய் ஜெயலட்சுமி கூறியுள்ளார். ஆனால் அதற்கு தான் வேலை செய்ய முடியாது என ஜெயசூர்யா கூறியுள்ளார். இதையடுத்து ஜெயலட்சுமியும், செந்தில்குமாரும் அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஜெயசூர்யா, வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டு பள்ளிக்கு சென்றார்.
இந்த நிலையில் பள்ளி வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்தார். இதை பார்த்த ஆசிரியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜெயசூர்யா நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து செந்தில்குமார் வரஞ்சரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.