பாசன வாய்க்கால்களை தூர்வாரக்கோரி விவசாயிகள் சாலை மறியல்


பாசன வாய்க்கால்களை தூர்வாரக்கோரி விவசாயிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 16 Sep 2018 9:45 PM GMT (Updated: 16 Sep 2018 5:59 PM GMT)

பாசன வாய்க்கால்களை தூர்வாரக்கோரி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 1 மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

கீழ்வேளூர், 


கீழ்வேளூரை அடுத்த சிக்கல் மெயின் ரோட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பாசன வாய்க்கால்களை தூர்வாரக்கோரி சாலை மறியல் போராட்டம் நேற்று நடந்தது.போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க நாகை ஒன்றிய செயலாளர் வடிவேல், ஒன்றிய தலைவர் முருகையன், விவசாய தொழிலாளர்கள் சங்க ஒன்றிய செயலாளர் ஜீவா ராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் பகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் நாகை மாலி கலந்துகொண்டு பேசினார்.

விவசாயிகளுக்கு தாமதமின்றி உடனடியாக பயிர் கடன் வழங்க வேண்டும். பழுதடைந்த ரெகுலேட்டர் மற்றும் மதகுகளை புதுப்பிக்க வேண்டும். அனைத்து பாசன வாய்க்கால்களையும் தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதுகுறித்து தகவல் அறிந்த நாகை தாசில்தார் இளங்கோவன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பாண்டியன் மற்றும் கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் நாகை - திருவாரூர் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதேபோல் தேவூர் கடைத்தெரு, கொளப்பாடு ஆகிய இடங்களிலும் சாலை மறியல் போராட்டம் நடந்தது. 

Next Story