ஜெயின் கோவிலில் ரூ.1½ கோடி மதிப்புள்ள 6 ஐம்பொன் சிலைகள் கொள்ளை
செஞ்சி அருகே உள்ள ஜெயின் கோவிலில் ரூ.1½ கோடி மதிப்புள்ள 6 ஐம்பொன் சிலைகள் கொள்ளை போனது.
செஞ்சி,
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பெரும்புகை கிராமத்தில் பகவான் மல்லிநாதர் ஜெயின் கோவில் உள்ளது. இந்த கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது.
இந்த கோவிலின் பூசாரியாக விழுக்கம் கிராமத்தைச்சேர்ந்த ஜெயராஜ்(வயது50) என்பவர் உள்ளார். இவர் வழக்கம் போல் நேற்று முன்தினம் காலையில் கோவிலுக்கு வந்து பூஜைகளை செய்து விட்டு மாலையில் வீட்டுக்கு சென்றார்.
அதன்பிறகு கோவில் துப்புரவு தொழிலாளியும், காவலாளியுமான சந்திரன்(65) கோவில் நடையை சாத்தி விட்டு கோவிலை பூட்டினார். நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் அப்பகுதியில் பலத்த மழை பெய்ததால், சந்திரன் கோவிலில் தங்காமல், வீட்டுக்கு சென்று விட்டார். அவரது வீடு கோவிலின் அருகில் தான் உள்ளது.
அவர் வீட்டுக்கு சென்ற பின்னர் நள்ளிரவில் கொள்ளையர்கள் கோவிலுக்கு வந்தனர். கோவிலில் உள்ள ஐம்பொன்சிலைகளை திருடும் திட்டத்துடன் வந்த கொள்ளையர்கள், கோவிலின் சுவரை உடைத்து பார்த்துள்ளனர். கோவில் சுவரை உடைக்க முடியாததால், கோவிலின் இரும்புக்கதவில் தொங்கிய பூட்டை அறுத்து எடுத்தனர்.
கோவிலின் இரும்பு கதவுக்கு பின்னால் மரத்தாலான பெரிய கதவு உள்ளது. அந்த கதவு பூட்டப்படாமல் சாத்தப்பட்டு இருந்தது. இதனால் கொள்ளையர்களுக்கு மிகவும் வசதியாகி விட்டது, கொள்ளையர்கள் மரக்கதவை திறந்து கொண்டு உள்ளே புகுந்தனர்.
இந்த கோவிலின் ஒரு அறையில் 35 ஐம்பொன் சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது. அந்த அறைக்குச்சென்ற கொள்ளையர்கள், கதவு பூட்டுகளை கடப்பாறையால் உடைத்து விட்டு உள்ளே புகுந்து 6 ஐம்பொன் சிலைகளை மட்டும் தூக்கிக்கொண்டு வெளியேறினார்கள்.
நேற்று காலையில் கோவிலை திறப்பதற்காக சென்ற சந்திரன், கோவிலின் இரும்பு கதவு பூட்டு அறுக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி அவர் கோவில் பூசாரிக்கும், நிர்வாகத்தினருக்கும், பொதுமக்களுக்கும் தகவல் தெரிவித்தார். உடனடியாக ஊர்பொதுமக்கள் கோவிலுக்கு திரண்டு வந்தனர். அவர்கள் கோவிலுக்குள் சென்று பார்த்த போது, 2 மல்லி தீர்த்தங்கரர் சிலைகள், தர்நேந்தர் சிலை, பத்மாவதி சிலை, ஜோலாம்பாள் சிலை, பார்சுவநாதர் சிலை என மொத்தம் 6 சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. அதில் ஒரு சிலை 15 கிலோ எடையுள்ளது என தெரிகிறது.
கொள்ளையடிக்கப்பட்ட 6 சிலைகளில் 5 சிலைகள் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை என கூறப்படுகிறது. அவற்றின் மதிப்பு சுமார் 1½ கோடி என கூறப்படுகிறது.
இச்சம்பவம் பற்றி செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story