அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற பெண் சாவு


அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற பெண் சாவு
x
தினத்தந்தி 17 Sept 2018 3:15 AM IST (Updated: 16 Sept 2018 11:48 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற பெண் இறந்து விட்டார். இதனால் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை, 


நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கீழமருதாந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத்குமார். விவசாயி. இவருடைய மனைவி சூர்யகலா (வயது 28). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகின்றன. இந்தநிலையில் கர்ப்பமாக இருந்த சூர்யகலாவை பிரசவத்துக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கடந்த 14-ந் தேதி சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சூர்யகலாவுக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவத்துக்கு பரிந்துரை செய்தனர். அதன்பேரில் நேற்று முன்தினம் சூர்யகலாவுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்று ஆண் குழந்தை பிறந்தது.

இதைத்தொடர்ந்து சூர்யகலாவை அறுவை சிகிச்சை அரங்கில் இருந்து வார்டுக்கு மாற்றினர். அப்போது சூர்யகலாவுக்கு அதிகப்படியாக ரத்த போக்கு ஏற்பட்டது.

இந்தநிலையில் உயிருக்கு போராடிய சூர்யகலா இரவு 7.30 மணியளவில் மருத்துவமனையில் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த சூர்யகலாவின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் நேற்று முன்தினம் இரவு மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர். பின்னர் அவர்கள், சூர்யகலாவுக்கு தகுந்த சிகிச்சை அளிக்காததால் அவர் இறந்துவிட்டதாக கூறி, டாக்டர்களை கண்டித்து சூர்யகலா உடலை வாங்க மறுத்து மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., மயிலாடுதுறை உதவி கலெக்டர் தேன்மொழி, தாசில்தார் விஜயராகவன், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் மகேந்திரன், மயிலாடுதுறை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ராஜசேகர், துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் ஆகியோர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் சூர்யகலாவின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து சூர்யகலாவின் உடலை அவரது உறவினர்கள் பெற்று சென்றனர். இது குறித்து மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் வினோத்குமார் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story