தூத்துக்குடி கடலில் 103 விநாயகர் சிலைகள் விஜர்சனம்


தூத்துக்குடி கடலில் 103 விநாயகர் சிலைகள் விஜர்சனம்
x
தினத்தந்தி 17 Sept 2018 3:30 AM IST (Updated: 17 Sept 2018 12:20 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி கடலில் நேற்று 103 விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டன.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி கடலில் நேற்று 103 விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டன.

விநாயகர் சதுர்த்தி

தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடந்து வந்தது. இந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் வழிபாடு முடிக்கப்பட்டு நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். அதன்படி இந்து முன்னணி மற்றும் இந்து மக்கள் கட்சி சார்பில் நேற்று தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புறங்களில் வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் கடலில் கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

ஊர்வலம்

நேற்று காலை முதல் தூத்துக்குடி, சிப்காட் பகுதியில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டு இருந்த 62 விநாயகர் சிலைகளும் ஒன்றன்பின் ஒன்றாக மேள தாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. இந்த சிலைகள் அனைத்தும் தூத்துக்குடி சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள தபசு மண்டபத்துக்கு வந்தன. அங்கு இருந்து விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்துக்கு மாநகர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். தொழில் அதிபர் ஈசுவரன், மூக்கையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சிவலிங்கம் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக இந்து முன்னணி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் குற்றாலநாதன் கலந்து கொண்டு கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து விநாயகர் சிலை ஊர்வலம் மேள தாளத்துடன் நடந்தது. ஊர்வலம் காசுக்கடை பஜார், 1-ம் கேட், மட்டக்கடை, வடக்கு கடற்கரை சாலை வழியாக திரேஸ்புரம் சங்குமுக கடற்கரையை வந்தடைந்தது. அங்கு இளைஞர்கள் விநாயகர் சிலைகளை ஒவ்வொன்றாக கடலுக்குள் எடுத்து சென்றனர். தகுந்த பாதுகாப்புடன் கடலுக்குள் ஆழமான பகுதிக்கு கொண்டு சென்று விஜர்சனம் செய்தனர்.

இந்து மக்கள் கட்சி

இதேபோன்று இந்து மக்கள் கட்சி சார்பில் வைக்கப்பட்டு இருந்த 12 விநாயகர் சிலைகள் மற்றும் ஏராளமான சிறிய விநாயகர் சிலைகளையும் கடலில் விஜர்சனம் செய்வதற்காக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இந்த ஊர்வலம் தூத்துக்குடி தேரடி திடலில் இருந்து தொடங்கியது. ஊர்வலத்துக்கு மாநில துணை தலைவர் ராம.குணசீலன், மாநில இளைஞர் அணி செயலாளர் செல்வசுந்தர் ஆகியோர் தலைமை தாங்கினர். ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட சிலைகள் திரேஸ்புரம் சங்குமுக கடற்கரையில் கரைக்கப்பட்டன.

இதையொட்டி தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா உத்தரவின் பேரில் தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசுபாதம் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

முத்தையாபுரம்

புதுக்கோட்டை பகுதியில் உள்ள 8 விநாயகர் சிலைகள், முத்தையாபுரம் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த 19 விநாயகர் சிலைகளும் முத்தையாபுரத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. இந்த ஊர்வலத்துக்கு இந்து முன்னணி மாநகர் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். தூத்துக்குடி தெற்கு மண்டல இந்து அன்னையர் முன்னணி தலைவி முத்துலட்சுமி, தொழில் அதிபர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்து முன்னணியை சேர்ந்த விஜயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் மாவட்ட துணை தலைவர் அருள்ராஜ், மண்டல தலைவர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஊர்வலம் சுனாமிகாலனி, சூசைநகர் வழியாக துறைமுக கடற்கரையை வந்தடைந்தது. அங்கு அனைத்து சிலைகளும் கடலில் கரைக்கப்பட்டன. முன்னதாக அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதே போன்று, லேபர் காலனி, கேம்ப்-1 பகுதியில் அந்த பகுதி மக்கள் சார்பில் வைக்கப்பட்டு இருந்த 2 சிலைகளும் துறைமுக கடற்கரையில் விஜர்சனம் செய்யப்பட்டன. நேற்று தூத்துக்குடி கடற்கரைகளில் மொத்தம் 103 பெரிய விநாயகர் சிலைகளும், வீடுகளில் வைக்கப்பட்டு இருந்த ஏராளமான சிறிய விநாயகர் சிலைகளும் கடலில் விஜர்சனம் செய்யப்பட்டன. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

உடன்குடி

உடன்குடி ஒன்றிய இந்து முன்னணி சார்பில் பகுதி முழுவதும் 38 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நேற்று 38 விநாயகர் சிலைகளும் தனித்தனி வாகனங்களில் ஏற்றி மாலையில் உடன்குடி ராமகிருஷ்ணா சிதம்பரேசுவரர் மேல்நிலைப்பள்ளி அருகே கொண்டு வரப்பட்டது.

உடன்குடி மெயின் பஜார் சந்திப்பில் ஒன்றிய தலைவர் செந்தில் செல்வம் தலைமையில் ஒன்றிய பொதுச் செயலாளர் கேசவன், நகர செயலாளர்கள் அருண்குமார், முத்து கிருஷ்ணன், ஆத்திசெல்வம் ஆகியோர் முன்னிலையில் குணசேகர், ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். முன்னதாக பா.ஜ.க. மாவட்ட செயலாளர் சிவமுருக ஆதித்தன், மாவட்ட சேவா பாரதி தலைவர் கிருஷ்ணமந்திரம் ஆகியோர் பேசினார்கள்.

ஊர்வலம் பண்டாரஞ்செட்டிவிளை, சிவலூர், கொட்டங்காடு, கிறிஸ்தியா நகரம், சத்தியமூர்த்தி பஜார், கூலத்தெரு, சிதம்பரத்தெரு, காலங்குடியிருப்பு, உடன்குடி பஸ் நிலையம், வில்லிகுடியிருப்பு வழியாக மீண்டும் உடன்குடி மெயின் பஜாருக்கு வந்து திருச்செந்தூர் கடலில் விஜர்சனம் செய்யப்பட்டது.

திருச்செந்தூர்

தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், குரும்பூர், நாசரேத், ஆத்தூர், கயத்தாறு, ஆறுமுகநேரி, தென்திருப்பேரை, உடன்குடி, சாத்தான்குளம், ஆழ்வார்திருநகரி ஆகிய பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன. அந்த சிலைகள் அனைத்தும் திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதன் பின்னர் சிலைகள் அனைத்தும் கடலில் விஜர்சனம் செய்யப்பட்டன.

Next Story