செங்கோட்டையை அமைதி பூங்காவாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் கலெக்டர் ஷில்பா வேண்டுகோள்
செங்கோட்டையை அமைதி பூங்காவாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என சமாதான கூட்டத்தில் கலெக்டர் ஷில்பா வேண்டுகோள் விடுத்தார்.
செங்கோட்டை,
செங்கோட்டையை அமைதி பூங்காவாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என சமாதான கூட்டத்தில் கலெக்டர் ஷில்பா வேண்டுகோள் விடுத்தார்.
சமாதான கூட்டம்
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது கலவரம் ஏற்பட்டது. இதில் அதிகாரிகள், போலீசாரின் வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் மோட்டார்சைக்கிள்கள், சூப்பர் மார்க்கெட் கடை ஆகியன அடித்து நொறுக்கப்பட்டது. மேலும் ஒரு வீட்டின் மீதும், கடையின் மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் பதற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து செங்கோட்டை பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செங்கோட்டை, தென்காசி தாலுகாக்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் செங்கோட்டை யூனியன் அலுவலகத்தில் அனைத்து இந்து சமுதாய மக்கள் மற்றும் முஸ்லிம்கள், ஜமாத்தார்களுடனான சமாதான கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார். தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கலெக்டர் ஷில்பா பேசியதாவது:-
சட்டப்படி நடவடிக்கை
நெல்லை மாவட்டம் செங்கோட்டை, தென்காசி தாலுக்காக்களில் வருகிற 22-ந் தேதி வரை 144 தடை உத்தரவு சட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது.
இந்நேரத்தில் பொதுக்கூட்டம், போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. வெளியூரில் இருந்து செங்கோட்டை பகுதிக்கு வருவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. ஒருவரையொருவர் குறைகள் சொல்வதை விட்டுவிடுங்கள். இனி நடப்பது நல்லவைகளாக நடக்கட்டும். நீங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அது உங்கள் கையில் தான் உள்ளது.
கலவரத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வாட்ஸ்அப், டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் தவறாக மதம் சார்பாக பதிவிடுவோர்கள் மீதும், அதனை பரப்புவர்களை கண்காணித்து அவர்களின் மீதும் சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அத்தகைய குறுஞ்செய்தியை அனுப்புபவர்கள் உடனடியாக கண்டறியப்பட்டு அதிகப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.
செங்கோட்டையை அமைதி பூங்காவாக மாற்றுவதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அமைதி பூங்கா
கூட்டத்தின் முடிவில், போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், சட்டப்படி மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அமைதி பூங்காவாக இருக்கும் செங்கோட்டையை அப்படியே அமைதி நிலவ வைக்கும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. வெளியூர் நபர்களை நம்முடைய பகுதிக்குள் நுழைய விட அனுமதிக்க கூடாது என்றார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, தென்காசி உதவி கலெக்டர் சவுந்தர்ராஜ், செங்கோட்டை தாசில்தார் வெங்கடாசலம் மற்றும் போலீசார், வருவாய்த்துறை அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் உள்பட அனைத்து அலுவலர்கள், அனைத்து இந்து சமுதாய தலைவர்கள், முஸ்லிம் மக்கள், ஜமாத்தார்கள் மற்றும் பொதுமக்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
துண்டுபிரசுரம் வினியோகம்
கூட்டத்தை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு மத நல்லிணக்க துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story