திருப்பணி என்ற பெயரில் பாழடைந்த கோவிலில் பள்ளம் தோண்டிய மர்ம நபர்கள்


திருப்பணி என்ற பெயரில் பாழடைந்த கோவிலில் பள்ளம் தோண்டிய மர்ம நபர்கள்
x
தினத்தந்தி 16 Sep 2018 10:45 PM GMT (Updated: 16 Sep 2018 7:38 PM GMT)

திருப்பணி என்ற பெயரில் பாழடைந்த கோவிலில் மர்ம நபர்கள் பள்ளம் தோண்டினர். புதையலுக்காக தோண்டினார்களா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வாலாஜாபாத்,

வாலாஜாபாத் ஒன்றியம் புள்ளலூர் கிராமத்தில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த கோவில் தற்போது பாழடைந்து காணப்படுகிறது. இந்த கோவிலின் உள்ளே சுவரில் வரலாற்று சிறப்புகளை விளக்கும் வகையில் பழமை வாய்ந்த மூலிகை ஓவியங்கள் வரையப்பட்டிருந்தது. பின்னாளில் இந்த கோவில் கவனிப்பாரின்றி புதர்கள் மண்டி பாழடைந்து காணப்பட்டது.

இந்தக் கோவில் ஓட்ட பிள்ளையார் கோவில் என்று ஒரு சிலரும், ராமர் கோவில் என்று ஒரு சிலரும், பெருமாள் கோவில் என்று ஒரு சிலரும் கூறி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் இல்லாத இந்த கோவிலில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பராமரிப்பு பணி செய்வதாக சில நபர்கள் இரவிலும் கோவில் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.

பராமரிப்பு பணி செய்து வந்த வெளி நபர்கள் மீது சந்தேகம் அடைந்த கிராம மக்கள் விசாரிக்கும் போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.

இதனால் கிராம மக்கள் பராமரிப்பு பணியை தடுத்து நிறுத்தியுள்ளனர். பிறகு கோவிலுக்குள் சென்று பார்க்கும் போது மூங்கிலால் சாரம் அமைத்து சுமார் 11 அடிக்கு மேல் பள்ளம் தோண்டி உள்ளது தெரியவந்தது.

மிகவும் பழமை வாய்ந்த கோவில் என்பதால் மன்னர்கள் புதையல் வைத்து இருக்கலாம் என்று பல ஆண்டு காலமாகவே கிராம மக்கள் பேசி வருகின்றனர்.

புதையலுக்காக மர்மநபர்கள் கோவிலில் பள்ளம் தோண்டி இருப்பார்கள் என்ற அச்சத்தில் கிராம மக்கள் காஞ்சீபுரம் தாலுகா போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். பராமரிப்பு பணி செய்த மர்ம நபர்கள் தற்போது தலைமறைவாகி விட்டனர்.

இது குறித்து வருவாய்த்துறை, தொல்லியல் துறையினருக்கு கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Next Story