மழைக்காலங்களில் மின்விபத்துக்களை தடுப்பது எப்படி? மின்வாரிய அதிகாரி விளக்கம்
மழைக்காலங்களில் மின்விபத்துக்களை தடுப்பது எப்படி என்று நெல்லை மண்டல மின்சார வாரிய தலைமை என்ஜினீயர் பேர்ள் மெட்டில்டா தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி,
மழைக்காலங்களில் மின்விபத்துக்களை தடுப்பது எப்படி என்று நெல்லை மண்டல மின்சார வாரிய தலைமை என்ஜினீயர் பேர்ள் மெட்டில்டா தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-
பருவமழை
தமிழகத்தில் வருகிற அக்டோபர் மாதம் 3-வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பருவமழை காலத்தில் பலத்த காற்று மற்றும் மழை காரணமாக ஏற்படும் மின் விபத்துகளை தடுக்க பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். காற்று மற்றும் மழைக்காலங்களில் மின் மாற்றிகள், மின் கம்பங்கள், மின்பகிர்வு பெட்டிகள் மற்றும் ஸ்டே கம்பிகள் அருகில் செல்ல வேண்டாம். மழையாலும், பெரும் காற்றாலும் மேல்நிலை மின் கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் செல்ல வேண்டாம். அது குறித்து மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மழையின் போது வீடுகளில் உள்ள சுவர்களில் தண்ணீர் கசிவு ஏற்பட்டால் அந்த பகுதியில் மின் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த பகுதியில் மின்சாரம் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். மின்பகிர்வு பெட்டிகள் அருகே தண்ணீர் தேங்கியிருக்கும் போது அதன் அருகே செல்லக்கூடாது. அதுகுறித்து மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இடி-மின்னல்
இடி-மின்னலின் போது வெட்ட வெளியிலோ, மரங்களின் அருகிலோ, மின் கம்பங்கள் மற்றும் மின்கம்பிகள் அருகிலோ நிற்க கூடாது. இடி மின்னலின் போது மிக்சி, கிரைண்டர், கம்ப்யூட்டர் மற்றும் தொலைபேசி போன்ற சாதனங்களை பயன்படுத்த வேண்டாம். மின்சார கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்சார வாரிய அலுவலர்களை அணுகவும்.
வீடுகளில் ஏற்படும் மின்விபத்துக்களை தவிர்க்க தரமான மின்சாதன பொருட்களை பயன்படுத்த வேண்டும். மின்சார பிளக்குகளை பொருத்துவதற்கு முன்னரும், எடுப்பதற்கு முன்னரும் சுவிட்சை அணைக்க வேண்டும். பிரிட்ஜ், கிரைண்டர் மற்றும் மின்சார மோட்டார்களுக்கு நிலை இணைப்புடன் கூடிய மூன்று பின் உள்ள பிளக்குகளை பயன்படுத்துவதோடு தரமான, ஒட்டு இல்லாத ஒயர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மின்சார கம்பிகளுக்கு அருகில் கட்டிடங்களை போதுமான இடைவெளி விட்டு கட்ட வேண்டும். டி.வி. ஆன்டெனா மற்றும் கேபிள் டி.வி. ஒயர்களை மேல்நிலை கம்பிகளுக்கு அருகில் எடுத்து செல்லக் கூடாது. மின் கம்பத்துக்கு போடப்பட்டு உள்ள ஸ்டே ஒயர்களில் ஆடு, மாடுகளை கட்டுவதோ, மின்கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்துவதோ, மின்கம்பங்கள், ஸ்டே ஒயர்கள் மற்றும் சர்வீஸ் பைப்புகளில் கொடிகளை கட்டி துணிகளை காயப்போடுவதோ கூடாது. விவசாய நிலங்களில் மின்சார வேலி அமைப்பது சட்டப்படி குற்றமான செயலாகும், மேலும் மின்சார வேலி அமைப்பதனால் மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் மின்விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படலாம்.
வாட்ஸ்-அப்
மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் பாதுகாப்பின்றி இருக்கும் உடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக இருக்கும் மின்கம்பிகள் மற்றும் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் மின் பகிர்வு பெட்டிகள் போன்றவற்றை படத்துடன் முழு முகவரியை குறிப்பிட்டு 89033 31912 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story