மின்சாரத்தை துண்டித்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருக்கு அரிவாள் வெட்டு


மின்சாரத்தை துண்டித்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 17 Sept 2018 4:00 AM IST (Updated: 17 Sept 2018 1:31 AM IST)
t-max-icont-min-icon

பெரியபாளையம் அருகே கோவில் திருவிழாவில் மின்சாரத்தை துண்டித்து விட்டு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை அரிவாளால் வெட்டியுள்ளனர்.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே பெரிமுடிவாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் (வயது 45). நேற்று முன்தினம் பெரிமுடிவாக்கம் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி ஊர்வலம் நடைபெற்றது.

அப்போது மேளம் அடிப்பது சரியில்லை என்று வெங்கடேசன் கூறியதாக தெரிகிறது. இதில் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் மோதலாக மாறியது. இதை பயன்படுத்தி மர்ம நபர்கள் சிலர் ஊர் முழுவதும் மின் தடையை ஏற்படுத்தி உள்ளனர்.

கிராமமே இருளில் தவித்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் வெங்கடேசனை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்று விட்டனர். சிறிது நேரத்தில் மின்சார வினியோகம் செய்யப்பட்டது.

அப்போது வெங்கடேசன் ரத்த வெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பஞ்செட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக பெரியபாளையம் போலீசார் பெரிமுடிவாக்கம் கிராமத்தை சேர்ந்த சிலரை பிடித்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story