தூத்துக்குடி மாவட்டத்தில் விதை விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு


தூத்துக்குடி மாவட்டத்தில் விதை விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 17 Sept 2018 2:30 AM IST (Updated: 17 Sept 2018 1:35 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் விதை விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் விதை விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதை முன்னிட்டு விவசாய பணிகள் தொடங்கி உள்ளன. இதனால் முக்கிய இடுபொருளான விதையின் இருப்பு, தரம் ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் விதை ஆய்வு துணை இயக்குனர் நாச்சியார் தலைமையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பல்வேறு விதை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.

சான்று

இதுகுறித்து விதை ஆய்வு துணை இயக்குனர் நாச்சியார் கூறுகையில் ‘விதை விற்பனையாளர்கள் உரிய கொள்முதல் பட்டியல் இல்லாமல் விதைகளை வாங்கி இருப்பு வைக்கக்கூடாது. வெளி மாநில விதைகளுக்கு உரிய சான்று இல்லாமல் விற்பனை செய்யக்கூடாது. விதை உரிமம் இல்லாமல் விதைகள் மற்றும் நாற்றுக்களை விற்பனை செய்வது, விதைகள் சட்டம் 1966 மற்றும் விதைகள் கட்டுப்பாட்டு ஆணை 1983 மற்றும் அத்யாவசிய பொருட்கள் சட்டம் 1955 ஆகியவற்றின் கீழ் கடுமையான குற்றம் ஆகும். இதற்காக 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது.

விவசாயிகள் முறையான விதை விற்பனை உரிமம் பெறாதவர்களிடம் இருந்து விதைகளையும், நாற்றுப் பண்ணைகளில் இருந்து நாற்றுக்களையும் வாங்கி பயிரிட்டு இழப்பு ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு விற்பனை செய்யப்படும் விதைகளும் நாற்றுக்களும் தரமற்றதாக இருக்க வாய்ப்பு உள்ளது. உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்களிடம் குவியல் எண், காலாவதி நாள், ஆகியவை குறிப்பிட்டுள்ள ரசீது பெற்றே விவசாயிகள் விதைகளை வாங்கிப் பயிரிட வேண்டும்‘ என்றார்.

Next Story