குடிமங்கலம் பகுதியில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்


குடிமங்கலம் பகுதியில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
x
தினத்தந்தி 17 Sept 2018 3:45 AM IST (Updated: 17 Sept 2018 1:41 AM IST)
t-max-icont-min-icon

குடிமங்கலம் பகுதியில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. எனவே குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடிமங்கலம்,

குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஆழியாற்றை அடிப்படையாக கொண்டு அம்பராம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அமராவதி ஆற்றை அடிப்படையாக கொண்டும் தாமரைப்பாடி கூட்டு குடிநீர் திட்டம் மூலமும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த 2 குடிநீர் திட்டங்களும் குடிமங்கலம் ஒன்றியம் கடைக்கோடி பகுதியாக இருந்தது. இதனால் இந்த பகுதிக்கு குடிநீர் தட்டுப்பாடு தொடர்கதையாகவே நீடிக்கிறது.

எனவே பொதுமக்களின் கோரிக்கையான திருமூர்த்தி அணையை அடிப்படையாக கொண்டு ரூ.56 கோடி செலவில் குடிமங்கலம் ஒன்றியத்தின் 23 ஊராட்சிகள் மற்றும் உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட 3 ஊராட்சிகள் பயன்பெறும் வகையில் திருமூர்த்தி அணை கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனாலும் அடிக்கடி ஏற்படும் குழாய் உடைப்புகள், போதிய குடிநீர் வினியோகம் இல்லாமை போன்ற காரணங்களால் குடிமங்கலம் ஒன்றிய பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இந்த நிலையில் குடிமங்கலம் பகுதியில் உடுமலை–பெதப்பம்பட்டி ரோட்டில் என்.என்.நகர் பிரிவு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு ஏராளமான குடிநீர் வீணாகிறது. இதனால் அம்மாபட்டி பகுதிக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் குழாய் உடைப்பை சீரமைப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் அதிக அளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது. அந்த தண்ணீரை அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் குடங்களில் எடுத்து செல்கிறார்கள். மேலும் அந்த தண்ணீரை வடிகட்டி குடிநீராக பயன்படுத்துவதாகவும் தெரிவித்தனர்.

எனவே திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்டத்தை மேம்படுத்தி குடிமங்கலம் பகுதிக்கு தட்டுப்பாடு இன்றி சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் குடிநீர் குழாய் உடைப்பு ஒரு சில தனியார் நிறுவனங்கள் அலட்சியமாக குழிதோண்டும் பணிகளில் ஈடுபடுவதே காரணம் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. எனவே குடிநீர் குழாயை சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கூறுகிறார்கள்.


Next Story