கல்லல் அருகே 10 கிராமங்களில் காய்ச்சல் பாதிப்பு
கல்லல் ஒன்றியத்திற்கு உட்பட்ட சாத்தரசன்பட்டி உள்பட 10 கிராமங்களில் பொதுமக்கள் காய்ச்சல் பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர்.
கல்லல்,
கல்லல் ஒன்றியம் அரண்மனைசிறுவயல் ஊராட்சிக்கு உட்பட்டது, சாத்தரசன்பட்டி. இங்கு 500–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் கடந்த ஒருவாரமாக பொதுமக்களுக்கு காய்ச்சல் ஏற்படுவதுடன், மயக்கம் வருவது, கை, கால்கள் நடக்க முடியாத அளவிற்கு வலிகளுடன் அவதியடைந்து வருகின்றனர். குடும்பத்தில் ஒருவருக்கு காய்ச்சல் வந்துவிட்டால், அடுத்தடுத்து அந்த குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் காய்ச்சல் ஏற்படுகிறது. சாத்தரசன்பட்டி மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள 10–க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த சில ஆண்டுகளாகவே பருவநிலை மாற்றத்தினால் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் காய்ச்சல் வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
சாத்தரசன்பட்டியில் தற்போது 100–க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு செம்பனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சிலர் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு செல்கின்றனர். ஆனால் கிராமத்தில் காய்ச்சல் பாதிப்பு குறைந்தபாடில்லை. மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான வீடுகளில் மக்கள் முடங்கிப்போய் உள்ளனர். ஆண்டுதோறும் காய்ச்சல் ஏற்படுவதை தடுக்கும் வகையில் சுகாதாரத்துறையினர் இந்த கிராமத்தில் ஆய்வு செய்து, அதனை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் கல்லல் ஒன்றியத்திற்கு உட்பட்ட மற்ற கிராமங்களிலும் காய்ச்சல் பாதிப்பு இருந்தாலும் அதனை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறும்போது, சாத்தரசன்பட்டி கிராமத்தில் உள்ள தரைமட்ட குடிநீர் தொட்டிகள் மூடப்படாமல் திறந்து கிடப்பதால், அதில் நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே விரைவில் காய்ச்சல் கட்டுப்படுத்தப்படும் என்றனர்.