புதுச்சேரி பல்கலைக்கழக நுழைவுவாயில் முன்பு மாணவ–மாணவிகள் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி பெரிய காலாப்பட்டில் புதுச்சேரி பல்கலைக்கழக நுழைவுவாயில் முன்பு மாணவ–மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காலாப்பட்டு,
புதுச்சேரி பெரிய காலாப்பட்டில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அரவிந்தர் மாணவிகள் விடுதி பகுதியில் ‘‘எல்லா மதத்திலும் சிறந்த மதம் இந்து மதமே’’; இந்து மதம் அனைவரையும் அரவணைத்து செல்கிறது’’ என்று வாசகங்கள் எழுதிய பேனர் வைக்கப்பட்டது. இந்த பேனர் மாணவர்களிடையே மதரீதியான வேற்றுமையை ஏற்படுத்துவதாக உள்ளதாக மாணவ–மாணவிகள் மத்தியில் தகவல் பரவியது.
அதைத் தொடர்ந்து இந்த பேனர் வைக்கப்பட்டதை கண்டித்தும், விடுதிகளில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியில்லை என்று குற்றம்சாட்டி அதனை சரி செய்ய கோரியும் 150–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் நேற்று மாலை திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக 2–வது நுழைவு வாயில் அருகே திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது பேனர் வைக்கப்பட்டதை கண்டித்தும், அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரியும் கோஷங்களை எழுப்பினார்கள். சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் செய்த பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.