ஏரிகள் மற்றும் பாசன வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளாத அதிகாரிகள் மீது நடவடிக்கை


ஏரிகள் மற்றும் பாசன வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளாத அதிகாரிகள் மீது நடவடிக்கை
x
தினத்தந்தி 17 Sept 2018 5:15 AM IST (Updated: 17 Sept 2018 2:02 AM IST)
t-max-icont-min-icon

ஏரி மற்றும் பாசன வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டார்.

பாகூர்,

பாகூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 21 ஏரிகளுக்கு சொர்ணாவூர் அணைக்கட்டில் இருந்து, பங்காரு வாய்க்கால் வழியாக தண்ணீர் வந்து நிரம்பும். ஆனால் அந்த வாய்க்கால் தூர்வாரப்படாததால் ஏரிகளுக்கு தண்ணீர்வரத்து தடைபட்டு ஏரிகள் நிரம்புவது சந்தேகத்துக்குரியதானது.

அதனை அறிந்த கவர்னர் கிரண்பெடி கடந்த 15 தினங்களுக்கு முன்பு சொர்ணாவூர் அணைக்கட்டு மற்றும் பங்காரு வாய்க்கால், ஏரிகள் மற்றும் பாசன வாய்க்கால் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஏரிகள் மற்றும் பாசன வாய்க்கால்களை உடனடியாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும், பருவமழை தொடங்கும் முன்பு தூர்வாரப்பட வேண்டும் என்றும், 15 நாட்கள் கழித்து அந்த பணிகளை பார்வையிட நான் (கவர்னர்) வருவேன் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கவர்னர் ஏற்கனவே தெரிவித்திருந்தபடி ஏரிகள், பாசன வாய்க்கால்கள் தூர் வாரப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்வதற்காக நேற்றுக்காலை அந்த பகுதிகளுக்கு சென்றார். அப்போது தூர்வாரும் பணிகள் எதுவும் நடக்காததைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

அப்போது ஒரு சில இடத்தில் கவர்னரை திருப்திப்படுத்தும் வகையில் தூர்வாரும் பணிகளை பூமிபூஜை செய்து தற்போது தொடங்கும் வகையில் பூஜை பொருட்கள் மட்டும் வைக்கப்பட்டிருந்ததை கண்டு கவர்னர் கோபம் அடைந்தார். அது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார்.

பின்னர் ஏரிகள் சங்க நிர்வாகிகளிடமும் அதுபற்றி விளக்கம் கேட்டார். அப்போது ஏரிகள் சங்கத்தினர், ‘‘ஏரிகளை தூர்வார அனுமதி அளித்து அதிகாரிகள் உத்தரவு வழங்காததால், தாங்கள் ஏரிகளை தூர்வாரவில்லை’’ என்று தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து அதிகாரிகளை கண்டித்த கவர்னர் கிரண்பெடி, மழைக்காலம் தொடங்கிய பின்னர் பாசன வாய்க்கால்களை தூர்வாருவதால் என்ன பயன் கிடைக்கும்? அரசு பணம்தான் வீணாகும் என்று கூறி உடனடியாக ஏரிகள் மற்றும் பாசன வாய்க்கால்களை தூர்வார போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும்படி கூறினார்.

மேலும் நான் ஆய்வு செய்து அதன் அடிப்படையில் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றுவதில் அதிகாரிகள் போதிய அக்கறை காட்டுவதில்லை. அந்த உத்தரவுகளை நிறைவேற்றுவதில் அரசியல் தலையீடு ஏற்படாமல் அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரிவர ஆற்ற வேண்டும் என்று கோபமாக கூறினார். மேலும் நீர்நிலைகளை தூர்வாரி மழை நீரை வீணாகாமல் தேக்கும்போது அதன் பயன் அனைவருக்கும் கிடைக்கும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பணியை தாமதம் செய்வதை ஏற்க முடியாது என்று கூறிய கவர்னர் கிரண்பெடி, இதுவரை தூர்வார நடவடிக்கை எடுக்காத பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தன்னுடன் ஆய்வுப் பணிக்கு வந்த பொதுப்பணித்துறை செயலாளர் விவேஷ்சிங்குக்கு உத்தரவிட்டார்.

பின்னர் தமிழக பகுதியான உச்சிமேடு, நாணமேடு ஆகிய இடங்களில் உள்ள இறால் குட்டைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரால் புதுச்சேரி மாநில பகுதிகளான மூர்த்திக்குப்பம், முள்ளோடை உள்ளிட்ட 10–க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்படுவதாக கவர்னருக்கு வந்த புகாரின் அடிப்படையில் அந்த கிராமங்களுக்கு நேற்று கவர்னர் சென்றார். அப்போது இறால் குட்டைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் பாதிப்பு ஏற்பட்டால் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கவர்னரின் இந்த ஆய்வின்போது, திட்ட அதிகாரி ருத்ரகவுடு, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தாமரை புகழேந்தி, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சவுந்தர்ராஜன், தாசில்தார் கார்த்திகேயன், வட்டார வளர்ச்சி அதிகாரி மலர் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story